Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM
பெங்களூரில் மல்லேஸ்வரம்-பீன்யா இடையே யான 2-வது கட்ட மெட்ரோ ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக பெங்களூர் எம்.ஜி.சாலை-பையப்பனஹள்ளி இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மல்லேஸ்வரம்-பீன்யா இடையேயான 2-வது கட்ட மெட்ரோ ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் `நம்ம மெட்ரோ' என்ற பெயரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 4 கட்டங்களாக கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. நான்கு கட்ட மெட்ரோ பணிகளும் 2018-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2011-ம் ஆண்டு எம்.ஜி.சாலை-பையப்பனஹள்ளி இடையே முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மிக குறைந்த நேரத்தில் நியாயமான கட்டணத்தில் மிக விரைவாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க முடிவதால் இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மல்லேஸ்வரம் சம்பிகே சாலையிலிருந்து பீன்யா வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு 3 பெட்டிகள் அடங்கிய மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. மல்லேஸ்வரத்தில் இருந்து பீன்யா வரை கட்டணமாக ரூ.23 வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக
ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சுமார் 80 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த மெட்ரோ ரயில் 10 ரயில் நிலையங்களில் நின்று 20 நிமிடங்களில் பீன்யாவை அடையும். இதே தூரத்தை சாலையில் பயணித்தால் 90 நிமிடங்கள் ஆகும்.
இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.26 ஆயிரம் கோடியில் 4-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்காக கன்டீரவா உள் விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT