Last Updated : 29 Oct, 2014 08:37 PM

 

Published : 29 Oct 2014 08:37 PM
Last Updated : 29 Oct 2014 08:37 PM

அறிக்கைகளை பரபரப்பு ஆக்காதீர்: 2ஜி-யை முன்வைத்து சி.ஏ.ஜி.-க்கு அருண் ஜேட்லி அறிவுறுத்தல்

தலைமைக் கணக்கு தணிக்கையாளர் தங்களது அறிக்கைகளை பரபரப்பாக்கி, தலைப்புச் செய்தியாக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஜி. மாநாட்டில் அருண் ஜேட்லி பேசும்போது இவ்வாறு கூறினார்.

"ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் மீதே ஆய்வு செய்யப்படுகிறது என்பதில் தணிக்கையாளர் கவனமாக இருக்க வேண்டும், மேலும், நியாயமான நடைமுறைகள் பின்பற்றுள்ளனவா என்பதைப் பார்த்தால் போதுமானது.

அவர் முடிவுகளை பரபரப்பாக்க வேண்டிய தேவையில்லை. அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற வேண்டிய அவசியமும் இல்லை.

தணிக்கையாளர் செயல்பூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் செயல்பூர்வமும், சுயகட்டுப்பாடும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். முடிவு எடுக்கப்பட்ட விவகாரங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை அவர் கூர்ந்து ஆய்வு செய்தால் போதுமானது” என்றார் அருண் ஜேட்லி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் ஏற்பட்ட உத்தேச இழப்பாக முறையே சுமார் ரூ.1.76 லட்சம் கோடி மற்றும் ரூ.1.84 லட்சம் கோடி என்று சி.ஏ.ஜி முந்தைய ஆட்சி காலக்கட்டத்தில் தெரிவித்திருந்தது, அரசுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்தது. எதிர்கட்சிகளுக்கும் அப்போது அத்தகைய ‘பரபரப்பு’ தேவைப்பட்டது.

ஆனால் இப்போது ‘ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் நடைமுறைகளை தீர ஆய்வு செய்தால் போதுமானது, உத்தேச இழப்புகளை வெளியிட்டு தலைப்புச் செய்திகளுக்குள் சி.ஏ.ஜி. இடம்பெறுவது கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் அருண் ஜேட்லி.

திங்களன்று இதே சி.ஏ.ஜி. மாநாட்டில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.வி.தாமஸ், நிதி முறைகேடு என்ற விவகாரத்துடன் சி.ஏ.ஜி தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உத்தேச இழப்புகள் பற்றி ‘வானாளவிய’மதிப்புகளை தெரிவிக்கக் கூடாது என்று கூறியதும் இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x