Last Updated : 15 Dec, 2013 10:04 AM

 

Published : 15 Dec 2013 10:04 AM
Last Updated : 15 Dec 2013 10:04 AM

சாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த் கெஜ்ரிவால் நேர்காணல்

பெரிய அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்த ‘ஆம்ஆத்மி கட்சி’(ஆ.ஆ.க.) இப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவது என்று தீர்மானித்துவிட்ட கட்சி, மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகமாகப் பேசுகிறார்.

உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன?

காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இணைந்து அடுத்த அரசை அமைக்க ஊக்குவிப்போம், நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். இவ்விரு கட்சிகளும் சேர்ந்தே ஊழலில் ஈடுபடுவதாக எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறது. எனவே, இம்முறை ஏன் அவை பகிரங்கமாகச் சேர்ந்தே அரசை அமைக்கக் கூடாது? எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்வதன் மூலம், உங்களுடைய லட்சியப்படி ஆட்சி நடத்தாமல் ஓடி ஒளிகிறீர்களா என்பதே இவ்விரு கட்சிகளும் எங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. மக்கள் அப்படி நினைத்திருந்தால் எங்களுக்கு 28 தொகுதிகள் கிடைத்திருக்காது. எங்களுக்குப் பெரும்பான்மை வலு இல்லை, எப்படி நாங்கள் ஆட்சி நடத்த முடியும்? எங்களுக்குப் பெரும்பான்மை வலு கிடைக்கும் நாளில் நாங்கள் ஆட்சி செய்வோம். ஆட்சி செய்வது ஒன்றும் ராக்கெட் செலுத்துவதைப் போன்ற சிக்கலான அறிவியல் வேலை அல்லவே?

வெளியில் இருந்துகொண்டு, பிரச்சினைகளின் அடிப்படையில் பாரதிய ஜனதாவுக்கு ஆ.ஆ.க. ஆதரவு தரலாம் என்று உங்கள் கட்சியின் சகா பிரசாந்த் பூஷண் யோசனை கூறியிருக்கிறாரே?

அந்தக் கேள்விக்கே இடமில்லை. “அப்படி ஒரு வாய்ப்பிருந்தால்… நிலைமை ஏற்பட்டால்…” என்று யூகமாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் அது. பா.ஜ.க. அல்லது காங்கிரஸை ஆதரிப்பதைவிட, ஆ.ஆ.க. எதிர்க்கட்சி வரிசையில் உட்காரும் என்று அவரே பின்னர் தெளிவுபடுத்திவிட்டார்.

பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, இந்தத் தேர்தலில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியதாக உணர்கிறீர்களா?

இல்லை, இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இல்லை.

டெல்லியில் மீண்டும் தேர்தல் நடந்தால் உங்களுடைய கட்சியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

இப்போது இருப்பதைவிட இரட்டை வலுவுடன் ஆ.ஆ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்.

மீண்டும் இதே போல தொங்கு சட்டசபை ஏற்பட்டால்?

அப்படி நேராது. ஆ.ஆ.க-வுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையில்தான் போட்டியிருக்கும்.

நீங்கள் இதை வரலாற்றில் இடம்பெறும் தீர்ப்பு என்றீர்கள்?

வரலாற்றில் இடம் பெறக்கூடிய தீர்ப்பு அல்ல, நிகழ்வு. இரு பெரிய கட்சிகளின் தலைவர்களை, முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடும் கட்சி யின் அறிமுகமில்லாத வேட்பாளர்கள் தோற்கடித் துள்ளனர். தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கு எங்க ளிடம் பணம் இல்லை, இதர வசதிகள் இல்லை, நேர்மை மட்டும்தான் எங்களிடம் இருந்தது. இந்தத் தேர்தல் நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலா னது. முதல்முறையாக இந்தத் தேர்தலின்போது தான் மக்கள் ஊழல், பணபலம், அடியாள் பலத்தை விட நேர்மைகுறித்து அதிகம் பேசினார்கள்.

இதைவிட இன்னும் பெரிய பொறுப்பை வகிக்க நீங்கள் தயாரா? காங்கிரஸ் அல்லாத பாரதிய ஜனதா அல்லாத மூன்றாவது அணிக்கு… ஆம்ஆத்மி கட்சி போன்றவற்றுக்கு அரசியல் களத்தில் வாய்ப்பு இருக்கிறதா?

மூன்றாவது அணியல்ல, நாங்கள்தான் முதலாவது அணி. நேர்மையான அரசியலில் இந்த நாட்டில் மிகப் பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்களால் வாழ்க்கையை நடத்தவே முடிய வில்லை. இந்தச் சூழலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே பிரச்சினைகளைத் தீர்த்து விடாது. இப்போதுள்ள நிர்வாக முறை மூலம் நேர்மையான நிர்வாகத்தை அளிக்க முடியாது. மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப நிர்வாகத்தை யும் மாற்றியமைக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலமும் நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவதன் மூலமும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதுதான் எங்களுடைய சித்தாந்தம்.

நாங்கள் மிகப் பெரிய அரசியல் சக்தி என்ற மாயை எல்லாம் எங்களுக்கு இல்லை. நாங்கள் மிகப் பெரிய சக்தியல்ல. நம் நாட்டின் எல்லா சாமானிய மனிதர்களும் ஒன்று திரண்டால், மிகப் பெரிய அரசியல் சக்திகளுக்கு நாம் பெரிய சவாலாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. டெல்லி வழிகாட்டிவிட்டது. சாமானிய மக்கள்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.

2014-ல் எல்லா மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடும் திட்டமிருக்கிறதா?

இல்லை. 22 மாநிலங்களிலும் 309 மாவட்டங்க ளிலும்தான் எங்களுக்கு அமைப்புகள் இருக்கின் றன. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இனிமேல்தான் தீர்மானிக்க வேண்டும். சரியானவர்களை அடையாளம் காண யோகேந்திர யாதவ் தலைமையில் தனிக் குழுவை அமைத்திருக்கி றோம்.

தேர்தல் முடிவு இப்படி வரும் என்று எதிர்பார்த்தீர் களா? உங்களுடைய சர்வே உங்களுக்கு 40 தொகுதி களுக்கு மேல் கிடைக்கும் என்று சொன்னதே?

வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோதே ஒரு தொலைக்காட்சி வாக்குக்கணிப்பு முடிவு என்று ஒன்றை அறிவித்தது. அதில் ஆ.ஆ.க-வுக்கு 5 முதல் 6 தொகுதிகள் வரைதான் கிடைக்கும் என்றது. அதற்குப் பிறகு, ஒரு லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அது போக, எங்களுடைய ‘துடைப்பம்’ சின்னத்தைப் போலவே இருந்த ‘தீப்பந்தம்’ சின்னத்தால் 7 முதல் 8 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம்.

ஆ.ஆ.க-வின் வெற்றியை காங்கிரஸுக்கு எதிரானதாகப் பார்க்கிறீர்களா?

காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டின் ஊழல்களுக்கும் எதிரானதாகப் பார்க்கிறேன்.

மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்த பெரிய அரசியல் தலைவர் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா?

அது என்னுடைய நம்பிக்கையல்ல, தீர்மானமான முடிவு, ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உறுதி. நான் தேர்தலில் தோற்கிறேனா, வெற்றி பெறுகிறேனா என்பதல்ல முக்கியம். அரசியல் மூலம் ஆதாயம் தேட நான் வரவில்லை. அப்படி நினைத்திருந்தால், பாதுகாப்பான தொகுதியை நாடியிருப்பேன். ஷீலா தீட்சித்தை நான் எதிர்த்தேன்... ஏனென்றால், பாரதிய ஜனதா அவரை எதிர்க்கவில்லை. கட்சியின் பெருந்தலைகளுக்கு எதிராக, வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று இரு கட்சிகளுக்கு இடையே ரகசிய உடன்பாடு. வாக்குவித்தியாசம் சுமார் 26,000 என்பதிலிருந்தே மக்களுடைய கோபம் எவ்வளவு தீவிரமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல்களில் ஷீலா தீட்சித் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால் அவர்மீது வழக்கு தொடர்வீர்களா?

நான் அல்ல, ஒரு லோக்பால்தான் விசாரணை நடத்தி, ஊழலில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தால் நடவடிக்கை எடுப்பார்.

நீங்கள் ‘ஜன லோக்பால்’மசோதா வேண்டும் என்று கேட்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியோ தான் விரும்பும் வகையில் லோக்பால் மசோதாவை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது. இதில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

நாங்கள் கேட்பது ‘லோக்பால்’; அரசு கொண்டுவர விரும்புவது ‘ஜோக்பால்’. மக்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்குச் சாவடியில் தீர்ப்பளிப்பார்கள்.

உங்களுடைய பலவீனமான அம்சங்கள் என்ன?

முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எங்கள் கட்சிக்குக் கிடைத்த ஆதரவு எப்படிப்பட்டது என்று அறிய விரும்புகிறேன். ஊரகப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றே நினைக்கிறேன்.

தான் பிரச்சாரம் செய்திருந்தால், ஆ.ஆ.க. டெல்லியில் இந்நேரம் ஆட்சி அமைத்திருக்கும் என்று ஹசாரே கூறியிருக்கிறாரே?

நான் ஒப்புக்கொள்கிறேன். அப்புறம் ஏன் அவர் எங்களுடன் இல்லை?

ஜன லோக்பால் மசோதா வேண்டும் என்று ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேவுடன் சேர்ந்துகொள்வீர்களா?

ஆம், ஒரு தொண்டனாகச் சேர்ந்துகொள்வேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை, முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவதாலும் பலவீனமடைந்து விட்டதாலும் “ஜோலா-வாலாக்கள்” அதிகார மையங்களாக உருவாகிவிட்டார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கண்டித்திருக்கிறாரே?

“மெர்சிடஸ்-வாலாக்களின்” காலம் முடிந்துவிட்டது. இப்போது “ஜோலா-வாலாக்கள்” ஆட்சி செய்ய வேண்டிய நேரம்.

உங்களை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள் என்று உணர்கிறீர்களா? உங்கள் கட்சியிடமிருந்து மக்கள் நிரம்ப எதிர்பார்க்கிறார்கள்.

நான் ஒப்புக்கொள்கிறேன். மிகப் பெரிய பொறுப்பு எங்கள்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்களுடைய கடமையைச் செய்கிறோம். பலன்கள் எங்கள் கைகளில் இல்லை. எங்களையும் அறியாமல் தவறு செய்துவிட்டால், வரலாறு எங்களை மன்னிக்கவே மன்னிக்காது என்ற அச்சமும் சில வேளைகளில் ஏற்படுகிறது.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x