Published : 17 Jan 2014 02:11 PM
Last Updated : 17 Jan 2014 02:11 PM
பழம்பெரும் வங்காள நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
தன் வசீகரத் தோற்றத்தாலும், அபார நடிப்புத் திறனாலும் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் வங்க மொழி நடிகை சுசித்ரா சென். வங்க சினிமாவின் பொற்காலத்தின் அடையாளமாக இருந்தவர். அந்தக் காலகட்டத்தில் வந்த 'அக்னிபரிக்ஷா', 'தேவ்தஸ்', 'சாத் பாகே பந்தா' போன்ற ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் நடித்தவர்.
வங்க மொழியில் சுசித்ராவைப் போல வேறெந்த நடிகையும் மக்களின் கவனத்தை இவ்வளவு ஈர்த்ததில்லை. கருப்பு - வெள்ளை திரைப்படங்கள் மட்டுமே வந்த காலத்தில், இவரது நடிப்புத் திறமை இவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது. துர்கா பூஜை நடைபெறும் சமயங்களில் வடிவமைக்கப்படும் லக்ஷ்மி, சரஸ்வதியின் சிலைகள், சுசித்ராவின் மாதிரியாக இருந்தன. அந்த அளவு சுசித்ராவின் புகழ் உயர்ந்திருந்தது.
1931-ஆம் ஆண்டு, வங்காளதேசத்தின் பப்னா பகுதியில் பிறந்த சுசித்ராவின் இயற்பெயர் ரமா தாஸ்குப்தா. இவரது பெற்றோர் கருணாமாய் மற்றும் இந்திரா தாஸ் குப்தா. நடிக்க வருவதற்கு முன்பே, திபநாத் சென் என்பவரை 1947-ஆம் ஆண்டு மணந்தார். நடிப்புத் துறையில் அவரது பெயரும் புகழும், அவரது இல்லற வாழ்க்கையை பாதித்தது என வதந்திகளும் உலாவியது.
ஆரம்பத்தில், நடிப்பதை விட பாடுவதில்தான் சுசித்ராவின் ஆர்வம் இருந்தது. 1951-ஆம் ஆண்டு, பிண்ணனிப் பாடகி வாய்ப்பிற்க்காக அவர் பாட சென்றபோதுதான், இயக்குனர் சுகுமார் தாஸ்குப்தா நடிக்க வாய்ப்பு வழங்கினார். சுகுமாரின் உதவி இயக்குனர் நிதிஷ் ராய் என்பவர் தான், சுசித்ரா என்கிற பெயரை வைத்தார்.
1952-ஆம் ஆண்டு, சுசித்ரா முதலில் நடித்த சேஷ் கோதை என்கிற திரைப்படம் முடிவு பெறாத நிலையில், சாத் நம்பர் கைதி என்கிற திரைப்படம் 1953-ஆம் ஆண்டு, அவரது முதல் திரைப்படமாக திரைக்கு வந்தது. அந்த வருடமே அவரது மற்ற மூன்று படங்களும் வெளியானது. 1954-ஆம் ஆண்டு, அக்னி பரிக்ஷா திரைப்படம், தொடர்ந்து 15 வாரங்கள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது.
வங்க சினிமாவின் மற்றுமொரு புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமாரின் ஜோடியாக இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. 'அக்னி பரிக்ஷா', 'சப்தபதி', 'பிபாஷா', 'ப்ரியோ பந்தபி' எனப் பல திரைப்படங்களில் இந்த ஜோடி நடித்தது. இவர்களது ஜோடி திரையில் வந்தாலே அந்தத் திரைப்படம் ஹிட் என்கிற நிலை உருவானது. 1953 ஆண்டிலிருந்து 1975 வரை, சுசித்ரா சென் - உத்தம் குமார் ஜோடி மொத்தம் 30 திரைப்படங்களில் நடித்துள்ளனர். பசந்தோ சவுத்திரி, அசோக் குமார் போன்ற நாயகர்களோடு சுசித்ரா நடித்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன.
1955-ஆம் ஆண்டு, பீமல் ராய் இயக்கிய 'தேவ்தாஸ்' படத்தில் தேவதாஸ் பாத்திரத்தின் ஜோடியாக, 'பாரோ' வேடத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார். 1963-ஆம் ஆண்டு, உலக திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்திய நடிகை என்கிற பெருமையை சுசித்ரா சென் பெற்றார். சாத் பாகே பந்தா என்கிற திரைப்படத்தில், அவரது நடிப்பிற்கு, சிறந்த நடிகை விருதைப் பெற்றார். 50 களில் 'விஷ்ணுபிரியா', 60 களில் 'ரினா பிரவுன்', 70 களில் 'பிஜயா' என, காதல் நாயகி வேடத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இவருக்கு பாராட்டுகளை வாங்கித் தந்தது.
சுசித்ரா சென் 52 வங்காள மொழி திரைப்படங்களிலும், 'பம்பாய் கா பாபு', 'மம்தா' உள்ளிட்ட 7 ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தேவ்தாஸ் படத்திற்குப் பின், அவரது நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 1974-ஆம் ஆண்டு குல்சார் இயக்கத்தில் வெளிவந்த 'ஆந்தி'. சஞ்சீவ் குமாருக்கு இணையாக அவர் நடித்திருந்த பாத்திரம் பலரது பாராட்டைப் பெற்றது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல அந்த பாத்திரப் படைப்பு இருந்ததால் திரைப்படம் சர்ச்சையிலும் சிக்கியது.
1978-ஆம் ஆண்டு, சவுமித்ர சாட்டர்ஜி உடன் நடித்த 'பிரணாய் பாஷா' படம் தோல்வியடைந்ததை அடுத்து, கொஞ்சம் கொஞ்சமா திரைத் துறையிலிருந்து சுசித்ரா விலகினார். அவர் விலகியதன் காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. திரைத் துறையிலிருந்து விலகிக் கொண்ட இவர், கிட்டத்தட்ட துறவி போல தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். இவரது இந்த மாற்றம், பொது வாழ்கையிலிருந்து திடீரென விலகிய ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகை கிரேடா கார்போவுடன் ஒப்பிடப்பட்டது.
ராமகிருஷ்ணா மடத்தின் பக்தையான சென், ஓய்வு வாழ்க்கையை தியானத்திலும், பிரார்தனையிலும் கழித்தார். 1989-ஆம் ஆண்டு, பரத் மகாராஜ் இறந்த போது, பேலூர் மடத்திலிருந்து மயானம் வரை சுசித்ரா நடந்து சென்று வந்தார்.
2005-ஆம் ஆண்டு, அவருக்கு தரப்படவிருந்த தாதா சாகேப் பால்கே விருதையும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. அவரது விருப்பத்திற்கிணங்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை குடும்பத்தினர் யாரும் வெளியே சொல்லாமல் ரகசியம் காத்தனர்.
சுசித்ராவின் மகள் மூன் மூன் சென் வங்காள திரைப்படங்களில் பிரபலமடைந்தாலும், தனது தாயின் நிழலைத் தாண்டி அவரால் புகழ் ஈட்ட முடியவில்லை. சுசித்ராவின் பேத்திகள் ரியா சென், ரெய்மா சின் ஆகிய இருவரும் கூட ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தனர். ரியா சென் தமிழில், பாரதிராஜாவின் தாஜ்மகால் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT