Published : 11 Jan 2017 03:57 PM
Last Updated : 11 Jan 2017 03:57 PM

அரசியல் கட்சிகளுக்கு வரி விலக்கு: ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அரசியல் கட்சிகளுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான் அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அரசியல் கட்சிகளுக்கு தங்கள் அரசியல் ஆட்சி பற்றி பிரச்சாரம் மேற்கொள்ள பணம் தேவை என்றும் இந்த மனு 100%வரி விலக்கை ரத்து செய்யக் கோருவதற்கு தகுதியில்லாத மனு என்றும் கூறி தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தனது மனுவில், 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டப்பிரிவு 13ஏ குறித்தும், மக்கள் பிரதிநிதிச் சட்டம் பிரிவு 29 குறித்தும் சில கேள்விகலை எழுப்பியிருந்தார். அதாவது சாமானிய மக்கள் வரி செலுத்தும் போது அரசியல் கட்சிகளுக்கு எப்படி விலக்கு அளிக்கலாம் என்பதை கோர்ட் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

அதாவது, “இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்த கட்சிகளுக்கு வருமான வரிச்சட்டம் 13-ஏ-யின் படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அதாவது இக்கட்சிகள் தங்கள் கணக்குகளை முறையாக தணிக்கை செய்து வருவாய்/செலவீட்டுக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) ஆகியவற்றையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்றே இந்தச் சட்டம் கூறுகிறது” என்று வழக்கறிஞர் சர்மா தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 16-ம் தேதியன்று மத்திய நிதிச்செயலர், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் அரசியல் கட்சி கணக்குகள் மீது விசாரணை இல்லை என்றும், வருமானவரிச் சட்டப் பிரிவு 13-ஏ-ன் படி 100% விலக்கு உள்ளது என்றும் கூறியதையடுத்தே தான் இந்த மனுவை மேற்கொண்டதாகக் கூறிய சர்மா, “இது இந்தியக் குடிமகன் மீது சாற்றப்படும் காயமாகும். எனவே இந்த வரிவிலக்கை உடனடியாக முழுதும் ரத்து செய்யாவிட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்குமே அபாயகரமானது” என்று தன் மனுவில் எச்சரித்திருந்தார்.

மேலும், ‘தற்போதைய நடைமுறைகளில் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு குறுக்கு உத்திகளைக் கடைபிடித்து வருகின்றன. இவர்கள் இந்திய மக்களுக்கு எந்த ஒரு சமூக சேவையோ, அற ரீதியிலான சேவையையோ ஆற்றுவதில்லை. நாட்டுக்கும் சேவை ஆற்றுவதில்லை. மாறாக ஊழலின் வேராகவே உள்ளனர்’ என்று சர்மா இந்த மனுவில் சாடியிருந்தார்.

ஆனால் இதனை ஒரு அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x