Published : 12 Oct 2013 10:26 AM
Last Updated : 12 Oct 2013 10:26 AM
தனது நீண்ட நாள் சகாவான காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்டிருக்கும் பிணக்கு நீங்கி, அக்கட்சியுடன் திமுக நெருங்கி வருவது போன்ற ஒரு சூழல் நிலவி வரும் வேளையில், அதைச் சற்றே அசைத்துப் பார்க்கும் வகையில், இரு கட்சிகளுக்கும் இடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தால் மீண்டும் பிணக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் விவகாரம் காரணமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இருந்து திமுக விலகியது. அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா - திமுக தலைவர் கருணாநிதி இருவருக்குமிடையே இருந்து வரும் ஒருவித புரிதலையும் மீறி, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இருப்பினும், கடந்த நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி. தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள கடைசி நிமிடத்தில் கை கொடுத்ததன் மூலம் மீண்டும் நட்பு துளிர்த்தது.
இந்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நற்சான்று அளிக்கும் வகையிலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை மட்டும் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தயாரித்துள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, அதிமுக உள்ளிட்ட 6 கட்சிகள் மறுப்பு அறிக்கையை வியாழக்கிழமை அளித்துள்ளன.
இருப்பினும், திட்டமிட்டபடி அக்டோபர் மூன்றாம் வாரத்தில் ஜேபிசி அறிக்கை மக்களவைத் தலைவரிடம் அளிக்கப்படும் என்று சாக்கோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத் தேர்தலும், அதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நெருங்கி வரும் வேளையில் இப்பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமெடுத்திருப்பது, இரு கட்சிகளிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திமுக தரப்பில் உள்ள மூத்த தலைவர்கள் அதை மறுத்துள்ளனர்.
இலங்கை பிரச்சினை காரணமாகவே நாங்கள் மத்திய அரசில் இருந்து வெளியேறினோம். 2ஜி விஷயத்தால் எங்களது அரசியல் உறவு பாதிக்காது என்றே நினைக்கிறோம்’’ என்று கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மத்திய கூட்டணியில் திமுக தற்போது அங்கம் வகிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வைத்தே எங்களது அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம் என்று உறுதிபடக் கூறினார்.
எனவே, நவம்பர் மாதம் 15 முதல் 17 வரை நடக்கும் அந்த மாநாடுதான், தமிழகத்தின் அரசியல் கூட்டணியை நிர்ணயிக்கப்போகும் கருவியாக இருக்கும் என்று கருதலாம்.
அது ஏற்காடு இடைத்தேர்தலுக்கு முன்பு நடைபெற இருப்பதால், அந்த தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதிலும் இலங்கை பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும் என்பது நிதர்சனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment