Published : 07 Feb 2017 03:50 PM
Last Updated : 07 Feb 2017 03:50 PM

ஜோக்குகளுக்கு மக்கள் சிரிக்க வேண்டுமா கூடாதா என்பதை தீர்மானிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கேலிப் பேச்சுகளுக்கு மக்கள் சிரிக்க வேண்டுமா கூடாதா என்பதற்கெல்லாம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீக்கியர்களை மையப்படுத்தி வெளியாகும் கேலிப் பேச்சுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஹர்வீந்தர் சவுத்ரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சீக்கியர்கள் மீது முத்திரை குத்துவது போல் சில கேலிப் பேச்சுகள் உள்ளன. அவை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அதேபோல், சீக்கியர்களை மையப்படுத்தி எழும் கேலிப்பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, "தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை பாதுகாக்கும் சட்டம் நாடாளுமன்றம் உருவாக்கியது. அதுபோன்றதொரு வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றத்தால் தரமுடியாது. மேலும், இத்தகைய வழிகாட்டுதலை யாரை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியும்?" என வினவினார்.

அப்போது டெல்லி குருதுவார ஷிக் பிரபந்தக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.புரி, "உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்தால் சீக்கியர்கள் மீது முத்திரை குத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்றார்.

இதேபோல் கூர்கா இனத்தவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமிட்டி சட்டப்பள்ளி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் "தொப்பி, கத்தி ஆகியவற்றை கூர்கா இனத்தவரை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, "நாட்டு மக்களுக்கு ஒழுக்க நெறிமுறைகளை நாடு வகுத்துக் கொடுக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே" என்றனர்.

மேலும் நீதிபதி மிஸ்ரா கூறும்போது, "கூர்கா சமூகத்தினர் என்றாலே பாதுகாப்பை நல்குபவர்கள் என்ற வகையில் ஒட்டுமொத்த தேசமும் மரியாதை கொண்டிருக்கிறது. ஆனால், இத்தகைய மனுவை தாக்கல் செய்ததன் மூலம் கூர்கா சமூகத்தினரை நீங்கள்தான் இழிவுபடுத்தியிருக்கிறீர்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும் தனி நபர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நீதிமன்றம் தலையிட முடியும் ஆனால் ஒவ்வொரு மத அமைப்பும் இதுபோன்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்தால் தனித்தனியாக நெறிமுறைகளை எப்படி வகுக்க முடியும்?" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x