Published : 26 Jan 2014 01:56 PM
Last Updated : 26 Jan 2014 01:56 PM
நாடு முழுவதும் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் நாட்டின் முப்படைகளின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அணிவகுப்பையும் கலைநிகழ்ச் சிகளையும் பார்வையிட்டார்.
டெல்லி ராஜபாதையில் சுமார் 8 கி.மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். காலை 10 மணி அளவில் சம்பிரதாய வழக்கப்படி 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த ஆந்திர மாநில சப்-இன்ஸ்பெக்டர் கே. பிரசாத் பாபுவுக்கு அவரது மறைவுக்குப் பிந்தைய அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
அமர்ஜவானில் பிரதமர் அஞ்சலி
முன்னதாக, குடியரசுத் தின விழாவின் தொடக்கமாக டெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவானில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் விழாவில் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டனர்.
கண்கவர் அணிவகுப்பு
இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் தேஜாஸ், பாலைவனங்களில் சீறிப் பாயும் அர்ஜுன் எம்.கே.-2 டாங்க் ஆகியவை இடம்பெற்றன.
இந்திய விமானப் படையில் அண்மையில் சேர்க்கப்பட்ட சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானம், ஜி-17 குளோப் மாஸ்டர் சரக்கு விமானம், அஸ்ட்ரா, ஹெலினா ஏவுகணைகள், நீர்மூழ்கி போர் கப்பல்களின் மாதிரிகள், ஆளில்லா உளவு விமானமான யு.ஏ.வி.-நேத்ரா, நிஷாந்த், ஆளில்லா உளவு வாகனமான முந்த்ரா ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
இவை தவிர டி-90 பீஷ்மா டாங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், இலகுரக துரூவ் ஹெலிகாப்டர், சுகோய் போர் விமானங்கள் உள்பட ராணுவத்தின் அதிநவீன போர் வாகனங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து வந்து இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு பறைசாற்றின.
தரைப்படை, விமானப்படை, கடற்படை, எல்லை பாதுகாப்புப் படை, துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களுக்குரிய பாரம்பரிய சீருடைகளுடன் ராஜபாதையில் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.
கோலாகல கொண்டாட்டம்
விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ராணுவ வீரர்களின் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. அதேநேரம் இந்திய விமானப் படை போர் விமானங்கள் வானில் பல்வேறு வர்ண ஜாலங்களை நிகழ்த்தின.
பின்னர் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம் பெருமைகளை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
இந்த ஆண்டு விழாவில் இடம்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இந்திய கலாசாரத் தையும் ராணுவ வலிமையையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்தன.
50,000 போலீஸார் பாதுகாப்பு
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெற்ற ராஜபாதையில் சுமார் 50 ஆயிரம் போலீஸாரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT