Published : 10 Nov 2013 02:25 PM
Last Updated : 10 Nov 2013 02:25 PM

காமன்வெல்த் மாநாடு: ராஜபக்‌ஷேவுக்கு மன்மோகன் கடிதம்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் இம்மாதம் 15-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் தன்னால் பங்கேற்க முடியாதது தொடர்பாக, சிறு குறிப்பு மட்டுமே கொண்ட அந்தக் கடிதம், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அதிபர் ராஜபக்‌ஷேவிடம் அளிக்கப்பட்டது.

அதேவேளையில், தம்மால் பயங்கேற்க முடியாதக் காரணத்தை அந்தக் கடிதத்தில் பிரதமர் குறிப்பிடவில்லை என்றும், அதில் உள்ள விஷயங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன.

காமன்வெல்த் மாநாட்டில் தனக்குப் பதிலாக இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்ற தகவலையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காததால், இலங்கை உடனான உறவு பாதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்தியா பங்கேற்பு... பிரதமர் புறக்கணிப்பு!

முன்னதாக, தமிழகத்தின் அழுத்தம் எதிரொலியாக இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தார். அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்தியக் குழு கொழும்புவுக்குச் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரதமருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார். அவரது தலைமையில் கொழும்பு பயணம் செல்லும் இந்தியக் குழுவில், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், கூடுதல் செயலாளர்கள் பவண் கபூர், நவ்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இடம்பெறுவர்.

தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் வலியுறுத்தல்கள் காரணமாக, இலங்கைக்குச் செல்வதில்லை என்று பிரதமர் முடிவெடுத்திருக்கிறார். அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேச நலனின் அடிப்படையில் அம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடரஜன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், காமன்ல்வெத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

அதேவேளையில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கை பாதிக்காத வகையில் பிரதமர் இலங்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒரு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x