Published : 12 Jun 2017 03:52 PM
Last Updated : 12 Jun 2017 03:52 PM

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூவர் குழுவை அமைத்தார் அமித் ஷா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூவர் குழுவை அமைத்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. இந்தக் குழுவில் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி மற்றும் வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களாக உள்ளனர்.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அணுகத் திட்டம்:

மூவர் குழு பாஜகவிடம் மட்டுமல்லாமல், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் அணுக உள்ளது. இந்தக் குழு, ''மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவரே வேட்பாளராக இருப்பார்'' என்று எதிர்க் கட்சிகளிடம் எடுத்துரைத்து சுமுக முடிவை எட்ட முயற்சிக்கும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தனது அருணாச்சலப் பிரதேச சுற்றுப்பயணத்தை அமித் ஷா ரத்து செய்துள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லியிலேயே அவர் முகாமிட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை முன்மொழிய ஜூன் 28 கடைசி நாள். வாக்கெடுப்பு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கைவிரித்தால்...

பாஜக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில் சிவ சேனா கட்சியுடன் உறவு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை அவர்கள் ஆதரிக்காமலும் போகலாம்.

அப்படியான ஓர் இக்கட்டான தருணத்தை எதிர்கொள்ளவே, ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றுவைத்துள்ளது.

ஒருவேளை சிவ சேனா தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதகரிக்க மறுத்துவிட்டால், இவர்களின் வாக்குகளே போதும் என்றும் பாஜக எண்ணுகிறது.

பாஜகவின் வேட்பாளர் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x