Published : 25 Sep 2016 09:57 AM
Last Updated : 25 Sep 2016 09:57 AM

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 2 இந்திய பொறியாளர்கள் நாடு திரும்பினர்

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து 14 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 2 இந்தியப் பொறியாளர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.

ஆந்திராவை சேர்ந்த டி.கோபிகிருஷ்ணா, தெலங் கானாவை சேர்ந்த சி. பாலகிஷண், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார், லஷ்மி காந்த் ஆகிய நால்வரும் லிபியாவில் உள்ள சிர்தே பல்கலைக்கழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். இவர்களை கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி, ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரை மட்டும் சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் கோபி கிருஷ்ணா, பாலகிஷண் ஆகியோரை மீட்க வேண்டும் என, அவர்களின் குடும்பத்தினர் மாநில அரசுகள் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லிபியா அதிகாரிகளுடன் பேசி, தொடர் முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக, கடந்த 15-ம் தேதி, கோபிகிருஷ்ணா, பாலகிஷண் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து லிபியாவிலிருந்து இவர்கள் இருவரும் மிகுந்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இவர்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஹைதராபாத் அழைத்து வந்து, இவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த இவர்களது குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x