Published : 21 Mar 2015 08:37 AM
Last Updated : 21 Mar 2015 08:37 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு தோண்டியெடுப்பதற்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மார்ச் 11-ம் தேதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில் அமைச்சர் கூறியுள்ள தாவது: தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் எரிவாயு தோண்டியெடுப்பதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். தமிழக ஆளுநர் மூலம் விவசாயிகள் சங்கம் அளித்த இந்த மனு பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, வங்கி உத்திரவாதம் உட்பட ஒப்பந்தப்படி சமர்ப்பிக்க வேண்டிய பல ஆவணங்களை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலிய அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கூட அந்த நிறுவனம் தேவையான ஆவணங்களை அளிக்கவில்லை. மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்கான எந்தப் பணியையும் இதுவரை அந்த நிறுவனம் தொடங்கவில்லை.
எனவே, மீத்தேன் திட்ட ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறை களின் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை பெட்ரோலிய அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மேலும், தமிழகத்தில் எந்த இடத்திலும் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT