Published : 30 Apr 2017 04:03 PM
Last Updated : 30 Apr 2017 04:03 PM
ஏப்ரல் 24-ம் தேதி சத்தீஸ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் படையினர் பலியான சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 24-ம் தேதியன்று அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பெண்கள் சிலபேரை புர்கபால் கிராமத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 650 பேர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இறக்கி விடப்பட்ட இந்தப் பெண்களில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதுமில்லை, குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களைப் போலவே இவர்கள் தோற்றமளித்தனர்.
புர்கபால் கிராமத்தின் அருகே சாலைத் திட்டம் ஒன்றின் பாலக்கட்டுமானத்தை பாதுகாத்து வந்தன சிஆர்பிஎஃப் 74-வது பட்டாலியன். இவர்கள் இந்தப் பெண்களைப் பற்றி ஒன்றும் வித்தியாசமாக உணரவில்லை.
ஆனால் சிஆர்பிஎஃப் ஜவான்கள் பார்க்காத விஷயம், அறியாத விஷயம் என்னவெனில் கிராமம் முழுதும் ஒட்டுமொத்தமாக காலிசெய்யப்பட்டிருந்தது. கிராமத்தில் ஒருவரும் இல்லை என்பதை ஜவான்கள் கவனிக்கத் தவறினர்.
இந்த அலட்சியத்திற்கு பெரிய விலையைக் கொடுக்க நேரிட்டதே சுக்மா மாவோயிஸ்ட் தாக்குதல் என்று அன்று தலைப்புச் செய்தியானது. அன்றைய தினம் மதியம் 1.00 மணியளவில் 72 ஜவான்கள் தங்கள் முகாமுக்கு திரும்புவதற்கு ஆயத்தமாகினர்.
வழக்கமான நடைமுறைகளின் படி அவர்கள் சாலையை விட்டு 50 மீட்டர்கள் தள்ளி ஒரு பாதியினர் ஒருபக்கத்திலும் மறுபாதியினர் மறுபக்கத்திலும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் திடீரென தோட்டாக்கள் மழை இவர்களைத் தாக்கியது. இரண்டு வரிசைகளில் சென்ற ஜவான்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள முயன்றனர். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, காலையில் வாகனம் இறக்கி விட்டுச் சென்ற கிராமப்பெண்கள் போன்ற தோற்றத்தில் இருந்த அந்தப் பெண்கள்தான் இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர் என்பது. 25 ஜவான்கள் பலியாகினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தண்டகாரண்ய சிறப்பு மண்டல சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில் பழங்குடி பெண்கள் மீது சிஆர்பிஎப் ஜவான்கள் மேற்கொண்ட பாலியல் பலாத்காரத்திற்கு பதிலடிதான் இந்தத் தாக்குதல் என்று அறிவித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினரிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளை அடித்துச் செல்வது இவர்களது உண்மையாக நோக்கமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இதனால் விளைந்த மோசமான தாக்கம் என்னவெனில் பாதுகாப்புப் படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை தகர்ந்து போனது.
பதில் தாக்குதல்:
மாவோயிஸ்ட் தாக்குதலுக்குப் பிறகு மர்கம் பாமன் என்பவரை உள்ளூர் போலீஸ் கைது செய்தனர். இவரது சகோதரி சோமாதி கூறும்போது, கைது செய்யப்பட்டவருக்கும் மாவோயிஸ்ட் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றார். மேலும் மட்கம் ஹுங்கா, உந்தம் ஹாண்டா என்ற இருவரை போலீசார் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கிராமத்தினர் புகார் செய்துள்ளனர்.
“2011-ல் அருகில் உள்ள தாட்மேட்லா என்ற கிராமம் பாதுகாப்புப் படையினரால் எரித்து சாம்பலாக்கப்பட்டது, அது போல் தற்போது எங்கள் கிராமமும் ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்று லக்ஷ்மி துலா என்பவர் கூறுகிறார்.
“நாங்கள் சிஆர்பிஎஃப் படையினரிடம், ‘நீங்கள் எங்களைக் கொல்லலாம் ஆனால் நாங்கள் இதில் ஈடுபடவில்லை’ என்று கூறினோம். நாங்கள் எப்பவும் மாவோயிஸ்ட்களை எதிர்த்தே வந்துள்ளோம் சிஆர்பிஎஃப் படையை ஆதரித்தே வந்துள்ளோம்” என்றார் அவர் மேலும். அன்றைய தினம் கிராமத்தில் ஏன் ஒருவர் கூட இல்லை என்று கேட்ட போது, “பைஜு போண்டும் என்ற பண்டிகையை நாங்கள் கொண்டாடுவதற்காக கிராமத்தை விட்டுச் சென்றிருந்தோம். நாங்கள் சிஆர்பிஎப் நபர்களைத்தான் ஆதரிக்கிறோம், ஆனால் இப்போது இந்தத் தாக்குதலுக்குப் பிறகு எதிர்காலம் இருண்டு விட்டது” என்று விஜய துலா என்பவர் கூறுகிறார்.
சிஆர்பிஎப் உதவி தலைமை ஆய்வாளர் டி.பி.உபாத்யாய் கூறும்போது, கிராமத்தினர் பயப்படவேண்டிய தேவையில்லை என்கிறார், ஆனால் புர்கபால்வாசிகளோ நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்று அஞ்சுகின்றனர்.
இதன் பின்னணி 2016-ம் ஆண்டுக்குச் செல்கிறது. முன்னாள் தலைமை போலீஸ் ஆய்வாளர் கல்லுரி என்பவர் புர்கபாலில் மாவோயிஸ் ஆதரவாளர்கள் 28 பேர் சரணடையக் கோரினார். ஆனால் சரணடைந்தவர்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் அல்ல என்பதோடு, மாவோயிஸ்ட்கள் கிராமத்தினர் 13 பேர் பட்டியலை தயாரித்து இவர்களைக் கொல்ல ஆயத்தமாகி வருகின்றனர் என்ற பயமும் புர்கபால் கிராமத்தினரை சூழ்ந்தது.
மார்ச் 10, 2017-ல் மாத்வி துலா என்பவரை போலீஸ் இன்ஃபார்மர் என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்ட்கள் கொலை செய்தனர். சிஆர்பிஎப் படையினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு இதுதான் கதி என்று மிரட்டுவதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராமத்தினர் கருதினர்.
இந்த அச்சுறுத்தல் வேலை செய்தது, சிஆர்பிஎஃப் ஜவான்களுடன் கிராமத்தினர் உரையாடுவதை நிறுத்திக் கொண்டனர்.
தற்போது ஏப்ரல் 24-ம் தேதி இந்த மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்துள்ளது, விரக்தியடைந்த ஜவான் ஒருவர் கேட்கும் போது, “நாங்கள் யாரை இங்கு பாதுகாக்கிறோ என்று புரியவில்லை. .இந்த ரத்தம் தோய்ந்த சாலையையா? இந்தச் சாலைகள் எங்கள் ரத்தத்தினால் கட்டப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT