Published : 25 Apr 2017 12:34 PM
Last Updated : 25 Apr 2017 12:34 PM
காஷ்மீரில் இளைஞர்கள் கற்களை வீசி பாதுகாப்புப் படைவீரர்களுக்கு எதிராக பொது இடங்களில் போராட்டம் நடத்துவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக பள்ளி சீருடைகள் அணிந்த இளம் மாணவிகள் தங்களது கோபத்தை பாதுகாப்பு படை வீரர்களின் காண்பிக்க துவங்கியுள்ளனர்.
கடந்த வாரம் முதலே காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பாதுகாப்பு படைவீரர்களுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். போரட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் பரவலாக காணப்பட்டது.
இப்போரட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தாமாக முன்வந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மாணவிகள் காயம் அடைந்தனர்.
மாணவிகளின் போராட்டம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,"மாணவிகள் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே மாணவிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன" என்றார்.
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எதிராக போரட்டத்தில் ஈடுபடும் மாணவிகள்
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கூறும்போது, ”காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை அரசாங்கம் எல்லா பக்கங்களிலிருந்தும் நசுக்குகிறது. நடப்பதை கண்டு நாங்கள் எப்படி விலகி இருக்க முடியும். காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு வரும் காலம் வந்து விட்டது" என்றார்.
2010-ம் ஆண்டுக்கு பிறகு காஷ்மீரில் பெண்கள் அதிக அளவில் போரட்டங்களில் பங்கேற்ற புகைப்படங்கள் 2016-ம் ஆண்டு அதிக அளவில் வெளிவந்தன. அதன்பிறகு தற்போது பெண்கள் பங்கேற்கும் போராட்டங்கள் காஷ்மீரில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் மாணவிகளின் போராட்டம் குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்து கைப்பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT