Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு பொதுக்குழு பிப்.2-ல் கூடுகிறது

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களைப் புறக்கணித்து வந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது.

ஞாயிற்றுக்கிழமை ராஜ் நிவாஸில் மாலையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் முதல்வருடன் ஆளுநர் இணக்கமாகப் பேசி சகஜமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியினரும் முதல்வருடன் சிரித்தபடி இருந்தனர். இருதரப் பினரையும் அருகருகே நிறுத்திப் பேசிக்கொண்டிருந்தார் ஆளுநர். இதற்கு முக்கியக்காரணம் பாஜகவுடன் நடந்த பேச்சுவார்த்தை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பாண்டியன் தெரிவித்ததாவது:

என்.ஆர்.காங்கிரஸ் செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 2-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஓட்டல் அண்ணாமலையில் நடக்கும். கட்சித்தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமை வகிப்பார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும். அத்துடன் சட்டமன்றத்தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்க ஆலோசனை செய்ய உள்ளோம். கட்சியின் பொதுச்செயலர் பாலன் அறிவுறுத்தலின்படி இத்தகவலை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 1-ம் தேதியன்று பாஜக கூட்டணியில் முக்கிய கட்சிகளைக் கூட்டணி சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழருவி மணியன் புதுச்சேரி வருகிறார். அவர் முதல்வரை சந்திப்பார் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன் எழுதிய ‘மலரட்டும் மாநில அந்தஸ்து’ என்ற நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 1-ம் தேதி இரவு கம்பன் கலையரங்கில் நடக்க உள்ளது. நூலை முதல்வர் வெளியிடுகிறார். தமிழருவி மணியன் திறனாய்வு செய்ய உள்ளார். அத்துடன் பாஜக கூட்டணி தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளுடன் பேசுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x