Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

மங்களா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே, மங்களா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 3 பயணிகள் இறந்தனர். 37 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் மும்பையில் கூறுகையில், "நிஜாமுதீன்-எர்ணாகுளம் இடையே இயங்கும் மங்களா எக்ஸ்பிரஸ் (12618) ரயில், நாசிக்கிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இகத்புரி - கோட்டி இடையே சென்று கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை காலை 6.20 மணிக்கு தடம் புரண்டது" என்றார்.

இந்த விபத்தில் 3 பயணிகள் இறந்தனர். காயமடைந்த 37 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் அலிகாரைச் சேர்ந்த ராகுல் குஷ்வாஹா (31) மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சத்பிர் சிங் ஆகிய 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தடம் புரண்ட 2 பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உள்ள மற்றொரு சடலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கோதாவரி எக்ஸ்பிரஸ், ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ், புசவல்-மும்பை பயணிகள், தபோவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தடம் புரண்ட ரயிலில் பயணம் செய்த 450 பயணிகள் இகத்புரி ரயில் நிலையத்துக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, வேறு ஒரு சிறப்பு ரயில் மூலம் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தடம் புரண்ட பகுதியில் ரயில்வே போலீஸ் மற்றும் ஊரக பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் கிரேன்களைக் கொண்டு மீட்புப் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.பயணிகளின் உறவினர்கள் விபத்தில் சிக்கியவர்கள் பற்றி தகவல் அறிந்து கொள்வதற்கு வசதியாக தனி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x