Published : 03 Jan 2014 11:38 AM
Last Updated : 03 Jan 2014 11:38 AM

ராகுலுக்கு பிரதமராக அனைத்து தகுதியும் உண்டு: மன்மோகன்

ராகுல் காந்தியை ஆதரிக்கும் மன்மோகன் சிங், மீண்டும் பிரதமர் பதவியை வகிக்கும் எண்ணம் தன்னிடம் இல்லை என்றார்.

மேலும், நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவு ஏற்படும் என்று அவர் ஆவேசமாகக் கருத்து தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் விவரம்:

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அப்போது புதிய பிரதமரிடம் எனது பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவேன். புதிய பிரதமர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவராகதான் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதிய தலைமுறையே நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தும்.

மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நான் பிரதமர் பதவி போட்டியில் இல்லை என்பதை எப்போதோ தெளிவுபடுத்தி விட்டேன். மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும்.

ராகுலுக்கு ஆதரவு

இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்திக்கு அனைத்து தகுதியும் உள்ளது. ஆனால், அந்த முடிவை தக்க நேரம் வாய்க்கும் போது, காங்கிரஸ் கட்சி எடுக்கும். நாட்டை இளைய தலைமுறையினர் வழி நடத்துவார்கள்.

பிரதமரான புதிதில் நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். என்றும் மக்களுக்கு சேவை செய்வதே என் எண்ணமாக இருந்திருக்கிறது. எனது பதவியை நான் துஷ்பிரயோகம் செய்ததில்லை.

எனது ஆட்சிக் காலத்தில் நான் ஒருபோதும் பதவி விலக நினைத்தது இல்லை. என்னுடைய பணியை நான் விருப்பத்துடனும் உண்மையுடனும் மேற்கொண்டு வருகிறேன். எனது பதவியைப் பயன்படுத்தி எனது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ எவ்வித ஆதாயத்தையும் அளிக்கவில்லை.

பலவீனமான பிரதமர் இல்லை

நான் பலவீனமான பிரதமர் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் பலம், பலவீனங்கள் குறித்து வரலாற்று அறிஞர்களே சொல்ல வேண்டும். இப்போது உள்ள எதிர்கட்சித் தலைவர்கள், ஊடகங்களை விட வரலாறு என் மீது பரிவோடு அணுகும் என நம்புகிறேன்.

பாஜக என்னை பலவீனமான பிரதமர் என பலமுறை விமர்சித்துள்ளது. அகமதாபத் தெருக்களில் அப்பாவி மக்கள் பலர் கொன்று குவிக்கப்படுவதற்கு தலைமையாக இருப்பதே பிரதமர் பதவிக்கான பலம் என்று பாஜக கருதினால் அப்படி ஒரு பலமான பிரதமர் இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை.

தமிழக மீனவர் பிரச்சினை

இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண இரு தரப்பு பிரதிநிதிகளும் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்பது உண்மையில்லை. பல நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களைப் பொருத்தவரை, பல முறை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மோடி மீது காட்டம்

குஜாராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும். குஜராத்தின் அகமதாபாத் நகர் தெருக்களில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதற்கு தலைமையேற்றவர்தான் வலிமையான பிரதமர் என்றால் அப்படிப்பட்ட வலிமையானவர் தேவையில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நரேந்திர மோடியின் எண்ணம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை.

ஆம் ஆத்மி குறித்து...

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜனநாயக நடைமுறைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

கூட்டணியில் சமரசம் இருக்கும்

கூட்டணி ஆட்சி நடத்துவதில் காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில சமரசங்களை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டியிருந்த்து. ஆனால், அது மேம்போக்கான சமரசங்களாக மட்டுமே இருந்துள்ளன" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

ஊழலுக்கு எதிராக...

2004 முதல் 2011 வரையிலான காலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போதைய நிலையில் 13.8 கோடி பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீவிரமாக போராடி வருகிறது. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் அரசு துறைகள் சாரந்த தகவல்கள் ரகசியமாக இருந்தன. இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எல்லாமே வெளிப்படையாக்கப்பட்டு உள்ளன.

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஆண்டிலும் எனது அரசு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வறுமைஒழிப்பு, மக்களின் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் எனது அரசு அதிக அக்கறை செலுத்தும். எனது அரசின் கடைசி நாள் வரைக்கும் ஓய்வின்றி உழைப்போம்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டோம்'

"நாட்டின் பண வீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம். உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அதற்கான முயற்சியில் வெற்றி பெறவில்லை. இந்த ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதுதான். பணவீக்கம் அதிகரித்ததற்குப் பிரதான காரணமே உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்ததுதான். இருப்பினும் அரசின் ஒருங்கிணைந்த கொள்கை காரணமாக சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் கூட பணம் கிடைத்தது.

உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில், சப்ளையை அதிகரிக்க வேண்டும். பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான சரக்கு போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும். குறிப்பாக அழுகும் பொருள்களான காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு இது பொருந்தும்.

சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்

நாட்டின் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியும் எட்டப்பட்டுள்ளது. வளர்ச்சி எட்டப்பட்டதோடு ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலோங்க தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எத்தகைய சூழ்நிலையிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு கைவிடாது. சீர்திருத்தம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர் நடவடிக்கை. இத்தகைய சீர்திருத்த நடவடிக்கை தொடர அரசு தொடர்ந்து முயற்சிக்கும்.

ஆட்சியில் எஞ்சியுள்ள நாள்களிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவில் தேக்க நிலை ஏற்பட்டபோதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய வகையில் மேற்கொண்டேன். எஞ்சியிருக்கும் பதவிக் காலத்திலும் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறேன். ஐந்து மாத காலம் என்பது மிக அதிகமான காலமாகும். இதற்குள் வளர்ச்சிக்கான வழிகளை மேற்கொள்ளமுடியும்.

அன்னிய நேரடி முதலீடுகளுக்கு முன்னுரிமை

அன்னிய நேரடி முதலீடுகளுக்கு தனது அரசு முன்னுரிமை அளிப்பதோடு அதற்குரிய சூழலையும் ஏற்படுத்தித் தருகிறது. அன்னிய நேரடி முதலீடுகள் குவியும்போது நமது பொருளாதார நிலைமை முற்றிலுமாக மாறும்.

கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு, ராணுவம், எண்ணெய் சுத்திகரிப்பு, பொருள் சந்தை, எரிசக்தி, பங்குச் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு தாராளமய கொள்கை உருவாக்கப்பட்டது. ரயில்வே மற்றும் மின்னணு வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விதிமுறைகளை தளர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது."

3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x