Published : 07 Mar 2014 01:12 PM
Last Updated : 07 Mar 2014 01:12 PM

குஜராத் வளர்ச்சியடைந்துவிட்டதாக பொய் கூறுகிறார் மோடி: கேஜ்ரிவால்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க காந்திநகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற அர்விந்த் கேஜ்ரிவாலை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த இரு நாள்களாக குஜராத்தில் முகாமிட்டிருந்தார். நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை சந்தித்து நேருக்கு நேர் கேள்வி கேட்கப் போவதாக தெரிவித்தார்.

குறிப்பாக குஜராத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அவரிடம் 16 கேள்விகளை முன்வைக்க உள்ளதாகவும் இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் மோடியின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாகவும் கேஜ்ரிவால் கூறினார்.

அனுமதி மறுப்பு

இதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள மோடியின் இல்லத்துக்கு அவர் காரில் சென்றார். ஆனால் நகருக்குள் நுழையும் முன்பே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். முதல்வரை சந்திக்க முறைப்படி முன்அனுமதி பெற வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போலீஸ் பாதுகாப்புடன் முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று மோடியின் தனிச் செயலரிடம் மனு அளித்தார். ஆனால் மோடியை உடனடியாகச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மணீஷ் சிசோடியா விளக்கம்

இதுகுறித்து மணீஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “மனு குறித்து மோடிதான் முடிவு செய்வார்.அவரது முடிவை உங்களுக்குத் தெரிவிப்போம் என்று தனிச் செயலர் எங்களை திருப்பி அனுப்பிவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காந்திநகர் எஸ்.பி. சரத் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:

கேஜ்ரிவாலின் காரை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. அவர்களாகவே காரை இங்கு நிறுத்தினர். சிசோடியாவை நான் முதல்வர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். முதல்வரை சந்திக்க அனுமதி கோரி அவர் மனு அளித்தார். இதுகுறித்து 2 அல்லது 3 நாள்களில் பதில் அளிக்கப்படும் என முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது என்றார்.

கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

மோடியைச் சந்திக்க அனுமதி கிடைக்காததால் கேஜ்ரி வால் நேற்று விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: என்னை போன்ற சாமானி யர்களைச் சந்திக்க மோடிக்கு நேரம் கிடையாது. அவர் பொதுக் கூட்டங்களில் பேச மட்டுமே செய்வார். கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டார்.

இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக மோடி தனது நிலையை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். முகேஷ் அம்பானியோடு அவருக்கு உள்ள நெருங்கிய தொடர்பு குறித்தும் அம்பானியின் உறவினரை அமைச்சராக்கியது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசின்ஷ் கோகில் நிருபர்களிடம் கூறியதாவது:

நமது கலாச்சாரத்தில் விருந்தினரை கடவுளுக்கு ஒப்பாக மதிக்கிறோம். கேஜ்ரிவாலும் ஒரு விருந்தினர்தான். யார் முதல்வராக இருந்தாலும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கும் மரபின்படி கேஜ்ரிவாலை முதல்வர் மோடி சந்தித்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x