Published : 20 Sep 2013 04:52 PM
Last Updated : 20 Sep 2013 04:52 PM

வி.கே.சிங்கிடம் விசாரணை எப்போது? - மத்திய அரசு விளக்கம்

முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் அமைத்த உளவுப் பிரிவு, முறைகேடான நடவடிக்கைகளீல் ஈடுபட்டதாகவும், நிதியைத் தவறாகக் கையாண்டதாகவும் எழுந்த புகார் தொடர்பாக, முழுமையான ஆய்வுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வி.கே.சிங் ராணுவத் தளபதியாக இருந்தபோது, 'தொழில்நுட்ப உறுதுணைப் பிரிவு' என்ற உளவுப் பிரிவை அமைத்திருக்கிறார். அப்போது, அந்தப் பிரிவு அனுமதியின்றி 'ஒட்டுக் கேட்பு' உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், நிதி விவகாரங்களிலும் தவறான அணுகுமுறைகள் கையாளப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, ராணுவத் தலைமையகம் ஆய்வு செய்து, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராணுவத் தலைமையகம் அளித்துள்ள அறிக்கையை முழுமையாக ஆராய்ந்தபிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தி மோடியுடன் நெருக்கம் காட்டியதன் காரணமாக, தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசும், காங்கிரஸும் ஈடுபட்டுள்ளதாக வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x