Last Updated : 15 May, 2017 03:56 PM

 

Published : 15 May 2017 03:56 PM
Last Updated : 15 May 2017 03:56 PM

மரணத்துக்குப் பிறகும் உத்வேகம் ஊட்டும் ராணுவ அதிகாரி உமர் பயஸ்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம். தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட இளம் ராணுவ அதிகாரி உமர் பயஸ் (23) வீட்டில் அமைதி சூழ்ந்திருக்கிறது.

12-ம் வகுப்புப் படிக்கும் உமரின் தங்கை உஸ்மா ஜான் அருகில் தலையில் ஸ்கார்ஃப் கட்டிய ஒரு டஜன் சிறுமிகள் அமர்ந்திருந்தனர்.

தன் சகோதரர் உமர் குறித்துப் பேசிய உஸ்மா, ''எங்களின் உத்வேகமாகவும், நம்பிக்கையாகவும் அண்ணன் இருந்தார். இந்த முறை அவர் வீட்டுக்கு வந்தபோது ஒரு பேனாவைப் பரிசாக அளித்தார். அத்துடன் 'கடினமாக உழை. அதுதான் உன் கனவுகளைப் பூர்த்தியாக்கும்' என்றார்.

இப்போது நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். இனி நீ கவலைப்படத் தேவையில்லை. உன்னால் உயரம் செல்ல முடியும் என்றார். மருத்துவராக ஆசைப்பட்டது நடந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் அவையனைத்தும் பொய்யாகிவிட்டது'' என்பவரின் கண்கள் கலங்கி நிற்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், ஹர்மைன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பயஸ் (23). ராணுவத்தின் ராஜ்புதானா ரைபில்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக (லெப்டினன்ட்) கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பணியாற்றி வந்தார். ஜம்மு மாவட்டம், அக்னூர் பகுதியில் நியமிக்கப்பட்டிருந்த உமர் பயஸ், நெருங்கிய உறவினர் திருமணத்தில் பங்கேற்க, விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் மே 9-ம் தேதி இரவு 8 மணியளவில் முகமூடி அணிந்த 2 தீவிரவாதிகள் அவரை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றனர். பின்னர் மே 10-ம் தேதி காலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அவரது உடல் கிடந்தது. தலை, மார்பு மற்றும் வயிற்றில் குண்டு காயங்கள் இருந்தன. மிக அருகில் இருந்து தீவிரவாதிகள் அவரை கொன்றதாக தெரியவந்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் முறையாக ராணுவத்தில் இணைந்த உமர், முதல்முறையாக தன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

சொந்த ஊர் செல்வதில் உள்ள ஆபத்து பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் ஆயுதமின்றி செல்வது குறித்து அவர் சிந்திக்கவில்லை. இதையடுத்து அங்கே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் உமர் பங்கேற்க விரும்பிய திருமண விழா, அவரது இறுதி ஊர்வல நிகழ்ச்சியாக மாறியது. உமர் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அவரின் தந்தை பயஸ் அகமது.

'சுயம்புவாய் முன்னேறியவர்'

''எங்களுடைய பழத்தோட்டங்களுக்கு எப்போதும் என்னுடன் வரும் மகன், ஆப்பிள் மரங்களுக்கு உரம் இடுவான். மிகவும் எளிமையானவன். சுயம்புவாகவே முன்னேறியவன். என்னை எப்போதும் பெருமைப்படுத்தியே இருக்கிறான்'' என்கிறார் அகமது.

'கடமை தவறாத அதிகாரி'

'பயஸ் எப்போது கடமை தவறாத ராணுவ அதிகாரியாகவே இருந்தான். அவன் பயந்து நான் பார்த்ததே இல்லை. அதே நேரத்தில் ராணுவத்தில் இருந்தாலும், தன் இயல்பில் இருந்து மாறவில்லை.

காலனின் கைகளில் இருந்த அந்த விழா நாளில் பாதுகாப்புக்காக பயஸிடம் ஆயுதங்களை எடுத்துச் செல்லச் சொன்னோம். அவன் மறுத்துவிட்டான். நான் யாரையும் துன்பப்படுத்தியது இல்லை. என்னையும் யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றான்'' என்று அழுகிறார் பயஸின் உறவினர் ஒருவர்.

பயஸ் குறித்து அவரின் நண்பர்கள் ரஹில் மற்றும் அதில் பேசும்போது, ''பயஸ் எங்களுக்கு உற்சாகம் அளிப்பவனாக இருந்தான். அவனுக்கு கணினியென்றால் மிகப் பிடிக்கும். ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பான். எங்கள் பள்ளியில் இருந்து ஏராளமானோர் தேசிய ராணுவ பயிற்சிக் கல்லூரி தேர்வில் கலந்துகொண்டனர்.

காஷ்மீரில் இருந்தே தேர்வானது அவன் ஒருவனே. பயஸ் எங்களின் உத்வேகமாகவும், ரோல் மாடலாகவும் திகழ்ந்தான்'' என்கின்றனர்.

அரசியல் சார்பற்றவர்

அதில் என்பவர் பேசும்போது, ''பயஸுக்கு அரசியலில் ஆர்வம் இருந்ததில்லை. நாங்கள் வாட்ஸ் அப்பில் பேசிக் கொள்ளும்போது அவன் அரசியல் குறித்துப் பேசவே மாட்டான்'' என்றார்.

அதிர்ச்சிகரமான இந்த மரணம் குறித்து பயஸின் தாய் பேச மறுத்துவிட்டார்.

உமர் பயஸின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், உள்ளூர் பள்ளி ஒன்றுக்கு உமர் பயஸின் பெயரைச் சூட்டி, கவுரவம் செய்ய ராணுவம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x