Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட உள்ளது. இந்த மசோதாவை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவதால் முட்டுக்கட்டை நிலவுகிறது.
இதனிடையே லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக குளிர்கால கூட்டத் தொடரை நீட்டிக்கவும் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்பால் மசோதா தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி டெல்லியில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. சமாஜ்வாதி கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது.
பகுஜன் சமாஜ், திமுக கூட்டத்தில் பங்கேற்க வில்லை. எனினும், லோக்பால் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றதால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அந்தக் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் லோக்பால் மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன. சில கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை ஆதரித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மசோதாவை எதிர்க்கிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் லோக்பால் மசோதாவுக்காக கூட்டத் தொடரை நீட்டிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. தேவைப்பட்டால் இரு அவைகளின் அலுவல் நேரத்துக்குப் பின்னரும் அவையில் அமர்ந்திருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, லோக்பால் மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமாஜ்வாதி முட்டுக்கட்டை
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் கோபால் யாதவ் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
லோக்பால் மசோதாவை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கும் என்று செய்திகள் பரவி வருவது முற்றிலும் தவறானது. அந்த மசோதாவை எங்கள் கட்சி தீவிரமாக எதிர்க்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
லோக்பால் மசோதா நிறை வேற்றப்பட்டால் எந்தவொரு கோப்பிலும் அமைச்சரோ, அதிகாரி களோ கையெழுத்திட முடியாது. அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கிவிடும் என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பல்வேறு இக்கட்டான நேரங்களில் ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். ஆனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா விவகாரங்களில் ஆரம்பம் முதலே முலாயம் சிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இன்று விவாதம்
மாநிலங்களவையில் லோக்பால் மசோதா திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது. மத்திய தொழிலாளர்அமைச்சர் சிஸ் ராம் ஓலாவின் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.
எனவே மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. -பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT