Published : 27 Oct 2014 09:09 AM
Last Updated : 27 Oct 2014 09:09 AM
மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நாளை நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக 41 உறுப்பினர்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
என்றாலும் தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி ஆதரவுடன் புதிய அரசு அமைக்க பாஜக முயன்று வருகிறது. இதுதொடர்பாக பாஜக சிவசேனா இடையே அதிகாரப் பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சிவசேனா 63 உறுப்பினர்களுடன் அவையில் 2-வது மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விதான் பவனில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூடி தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். இதையடுத்து மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை, பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். ஆளுநர் விரும்பினால் அவையில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்றார்.
முன்னதாக ஏக்நாத் காட்சே, மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மூத்த தலைவர் வினோத் டாடே ஆகியோர் அரசு அமைப்பதற்கான ஏற்பாடு கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மும்பையில் நாளை நடைபெறும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர பாஜக மேலிட பொறுப்பாளர் ஜே.பி. நட்டா ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.
தெற்கு மும்பையில் பரந்து விரிந்த வான்கடே மைதானத்தில் பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர் களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT