Last Updated : 21 Jul, 2016 05:04 PM

 

Published : 21 Jul 2016 05:04 PM
Last Updated : 21 Jul 2016 05:04 PM

கர்நாடகாவில் அசத்தல்: உள்துறை அமைச்சரை தொடர்புகொண்ட ஜூனியர் உள்துறை அமைச்சர்

கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரனுக்கு தக்‌ஷினா பகுதியை ஒட்டிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்நாடகாவின் புத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த ஹராடியில் திவித் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அப்பள்ளியிலுள்ள மாணவ சட்ட சபையின் உள்துறை அமைச்சராக உள்ளார்.

திவித் பயிலும் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் நான்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புப் புறகணிப்புகளில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள் முன் வைத்தனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, சம்பந்தபட்ட பள்ளியில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ததாக கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனை ஏற்காத மாணவர்கள் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை மாநில கல்வி அமைச்சகத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினர்.

இதனையடுத்து மாணவர் திவித் தனது மாமாவின் உதவியோடு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரனின் தொலைபேசி எண்ணை பெற்று,“நான் எனது பள்ளியிலுள்ள மாணவர் சட்டசபையில் உள்துறை அமைச்சராக உள்ளேன். நான் உங்களிடம் ஐந்து நிமிடம் பேச வேண்டும்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

மாணவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டதும் பரமேஸ்வரன் தனது பணிகளை முடித்த கையோடு உடனடியாக திவித்தை அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பரமேஷ்வரனிடம் கூறிய மாணவர் திவித்திடம், பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார் பரமேஷ்வரன்.

இதனையடுத்து உள்துறை அமைச்சர் பரமேஷ்வரன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன்வீர் சைத்தை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.



.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x