Published : 19 Apr 2014 09:15 AM
Last Updated : 19 Apr 2014 09:15 AM

பஸ்ஸில் ரூ.45 லட்சம் பறிமுதல்: மாஜி அமைச்சரின் மனைவி கைது

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரின் மனைவி அரசு பஸ்ஸில் கொண்டு சென்ற ரூ.45.10 லட்சத்தை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

ஆந்திர மாநில முன்னாள் கல்வித் துறை அமைச்சர் பார்த்தசாரதி. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்தார். தற்போது இவர் மசூலிப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இவரது மனைவி கமலா, வியாழக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து அரசு பஸ்ஸில் விஜயவாடாவிற்கு வந்து கொண்டிருந்தார். வனஸ்தலிபுரம் அருகே போலீஸார் பஸ்ஸை நிறுத்தி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது கமலாவிடம் இருந்த லேப்டாப் பேக்கை சோதனையிட்டபோது ரூ.45.10 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், இந்த பணம் தங்களது நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கொண்டு செல்வதாக கமலா தெரிவித்தார். ஆனால் அதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் போலீஸார் அந்த பணத்தை பறிமுதல் செய்து கமலாவை கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் பார்த்தசாரதி கூறுகையில், நாடாளு மன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் ரூ. 70 லட்சம் வரை செலவு செய்யலாம். புதிதாகக் கட்டி வரும் கட்டிடத்தின் செலவுக்காகவும் தேர்தல் செலவிற்கும் எனது மனைவி பணம் எடுத்துவந்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இந்தச் சம்பவம் தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x