Published : 10 Oct 2014 10:37 AM
Last Updated : 10 Oct 2014 10:37 AM
ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள 90 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. தாக்குதல் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1-ம் தேதியிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 8 இந்தியர்கள் உயிரிழந்தனர். எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜம்மு, சம்பா, கதுவா ஆகிய மாவட்டங்களில் உள்ள 60 இந்திய ராணுவ நிலைகள் மீதும், 90 கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியாலும், பீரங்கி குண்டுவீச்சின் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் 3 இந்திய வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள சம்பா, ஹிராநகர், ராம்கர், ஆர்னியா, ஆர்.எஸ்.புரா, கனாசக், பார்க்வால் ஆகிய இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “இந்தியா யாருக்கும் அடி பணி யாது. பாகிஸ்தானின் தாக்கு தலுக்கு தகுந்த பதிலடியை நமது வீரர்கள் அளித்து வருகின்றனர். எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைமையை பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக கண்காணித்து வருகிறார்” என்றார்.
இதனிடையே, ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் இராக் மற்றும் சிரியாவில் கணிசமான நிலப்பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பின் கொடியை ஏந்தி சிலர் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர் பாக ஸ்ரீநகரில் உள்ள இந்திய ராணுவத்தின் 15-வது படைப்பிரி வின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா கூறும் போது, “நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
மோடி எச்சரிக்கை
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாரமதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் அவர் பேசியதாவது:
எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டு வருகிறது. அதற்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். அதனால் எதிரிகள் நிலைகுலைந்துள்ளனர்.
பழைய நினைவில் நமது எதிரிகள் சண்டை நிறுத்தத்தை மீறி வருகின்றனர். ஆனால் காலம் மாறிவிட்டது. இனிமேல் தவறுகளை சகித்துக்கொள்ள மாட்டோம். அவர்களுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
நமது வீரர்கள் வார்த்தைகளால் பேச மாட்டார்கள். துப்பாக்கியால் பேசுவார்கள். சண்டை நிறுத்தம் மீறப்படும் போதெல்லாம் அவர்கள் துப்பாக்கியால் பதில் அளிப்பார்கள்.
தேர்தல் வரும். அரசுகள் மாறும். ஆனால் எல்லையில் போரிடும் நமது வீரர்களின் மனஉறுதியைக் குலைக்கும் வகையில் நாம் செயல்படக்கூடாது. தேசத்தின் நலன் கருதி இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மோடி, ‘‘நீங்கள் (சரத் பவார்) பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது எல்லை விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான், சீனா வுடன் பிரச்சினை எழுந்தது. அப்போது நீங்கள் எதுவுமே செய்ய வில்லை. மும்பை, மாலேகான், புனேவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போதும் மவுனமாக இருந் தீர்கள். தேசப்பற்று காரண மாக இந்தப் பிரச்சினைகளை அப்போது பாஜக அரசியலாக்க வில்லை’’ என்றார்.
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : அருண் ஜேட்லி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளதை அந்நாடு உணரவேண்டும். இதுபோன்ற சாகச செயல்களில் அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டால், அவர்கள் மறக்கவே முடியாத அளவுக்கு நமது வீரர்கள் பாடம் கற்றுத்தருவார்கள். அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எல்லையில் அமைதி நிலவவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பினால், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதுபோன்று தாக்குதல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை.
எல்லையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ளாமலேயே கடும் விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் முன்வைப்பது தவறானது. அதுவும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தலைவர் ஒருவர், (தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்) எதையுமே அறிந்து கொள்ளாமல் பேசிவருகிறார். எல்லையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நமது வீரர்கள் எந்த அளவுக்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT