Last Updated : 20 Oct, 2014 07:11 PM

 

Published : 20 Oct 2014 07:11 PM
Last Updated : 20 Oct 2014 07:11 PM

சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்குமா?- மகாராஷ்டிரத்தில் நீடிக்கிறது குழப்பம்

சிவசேனா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்குமா அல்லது வேறு ஏதேனும் அரசியல் போக்கு நிலவுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரு கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய அணுகுமுறையில் இதுவை தெளிவு இல்லை.

மகாராஷ்டிரத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இன்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு பற்றி சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறும்போது, "புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்யும் உரிமையை உத்தவ் தாக்கரேவுக்கு ஏகமனதாக அளிக்கப்பட்டது.

இன்றைய கூட்டம் பாஜக பற்றியது அல்ல. (ஆதரவு தரும் முடிவு) நாங்கள் பாஜக பற்றி விவாதிக்கக் கூட இல்லை. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவை உத்தவ் எடுப்பார். அது ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றார்.

நேற்று உத்தவ் தாக்கரே, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றிக் கூறும்போது, ‘பாஜக முதலில் அணுகட்டும்’ என்று கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா வென்ற இடங்களை விட தற்போது அதிக இடங்களை வென்றுள்ளது. ஆனாலும் 1995ஆம் ஆண்டு 73 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியைத் துறந்து தனித்துப் போட்டியிட்ட பாஜக 288 தொகுதிகளில் 122 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு நீட்டிய ஆதரவுக்கரத்தை பாஜக ஏற்க மறுத்துவிட்டது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது: "காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலை விமர்சித்துத்தான் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தோம்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதுபோன்றதொரு கூட்டணியை அமைத்தால், எங்களுக்கு வாக்களித்தவர்களை அவமதித்தது போலாகும். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான இறுதி முடிவை கட்சி முடிவு செய்யும். தேர்தலில் பிரச்சாரத்தின்போது சிவசேனாவை விமர்சித்து நாங்கள் பேசவில்லை. அக்கட்சியை விமர்சிக்க மாட்டோம் என்பதை தனது பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்" என்று கூறியிருந்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானியும் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால், சிவசேனாக் கட்சி இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி பற்றி உத்தவ் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அக்கட்சியின் எம்.பி. கூறியுள்ளார்.

ஆனால், உத்தவ் தாக்கரே, பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x