Last Updated : 22 Oct, 2014 04:02 PM

 

Published : 22 Oct 2014 04:02 PM
Last Updated : 22 Oct 2014 04:02 PM

காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஷ்மீர் மாநில மக்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட நாளை பிரதமர் காஷ்மீர் செல்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளியை காஷ்மீர் மக்களுடன் கொண்டாட நாளை பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் செல்கிறார். பிரிவினைவாதிகள் மோடி வருகையை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் முயற்சிகளை தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக தீபாவளிப் பண்டிகையை காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதாக அவர் செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார்.

கடந்த மே மாதம் பிரதமராகப் பதவியேற்றது முதல் 4-வது முறையாக அவர் காஷ்மீருக்கு வருகை தருகிறார்.

பிரதமர் வருகையையொட்டி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு தர நிவாரணம் கிடைக்கும் என்று மக்கள் நினைக்கும் அதே வேளையில் ஹுரியத் மாநாடு கட்சியின் இரு குழுக்களும் அமைதியான முறையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

“காஷ்மீர் மக்கள் வரலாறு காணாத வெள்ளத்தினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த போது மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் காயங்களில் உப்பு தடவ முனையும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சையத் அலி ஷா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஈத் பண்டிகையின் போது நாட்டின் முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர், முஸ்லிம் பெரும்பான்மை மாநிலத்தில் தீபாவளியைக் கொண்டாட வருவது “ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x