Last Updated : 18 Oct, 2014 06:20 PM

 

Published : 18 Oct 2014 06:20 PM
Last Updated : 18 Oct 2014 06:20 PM

கருப்புப் பண விவகாரத்தில் சாகச அணுகுமுறை கைகொடுக்காது: அருண் ஜேட்லி

கருப்புப் பண விவகாரத்தில் பெயர்களை வெளியிடுவதில் பாஜக அரசு பல்டி அடித்ததாகக் கூறப்படும் விமர்சனங்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, “அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு கடுமையாக செயல்பட்டு வருகிறது, பெயர்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்துவோம். ஆனால் அதற்காக இந்த விவகாரத்தில் சாகச மனோபாவத்துடன் செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால் அயல்நாடுகளுடன் இது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறியதாகும், இதனால் எதிர்காலத்தில் அந்த நாடுகளின் ஒத்துழைப்பை நாம் கருப்புப் பண விவகாரத்தில் எதிர்பார்க்க முடியாது.

அவசரப்பட்டு சாகச ரீதியில் செயல்பட்டால் அது கருப்புப் பண கணக்கு வைத்திருப்பவர்களுக்கே சாதகமாக முடியும். சாகச அணுகுமுறை குறுகிய கால கண்ணோட்டம் கொண்டது. எனவே முதிர்ச்சியான அணுகுமுறையே பிரச்சினையின் வேர் வரை நம்மைக் கொண்டு செல்லும்” என்று பதிவிட்டுள்ளார் அருண் ஜேட்லி.

அயல்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள நபர்களின் பெயர்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து காங்கிரஸ் கட்சி, பாஜகவை பல்டி அடித்துவிட்டதாக விமர்சனம் செய்தது.

அயல்நாடுகளுடன் செய்து கொண்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் பெயர்களை வெளியிடுவதற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறது. எனவேதான் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அவ்வாறு கூறியுள்ளது என்று பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x