Published : 25 Oct 2014 05:07 PM
Last Updated : 25 Oct 2014 05:07 PM
மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டிருக்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் சனிக்கிழமை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் புதிய ஊகங்களை கிளப்பியுள்ளது.
முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்துவரும் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஆர்எஸ்எஸ் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில், மறுநாள் கட்கரியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
நாக்பூர் தொகுதி எம்.பி.யான கட்கரி, இங்குள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத் துக்கு மோகன் பாகவத்தை சந்திக்க நேற்று இரு சக்கர வாகனத்தில் வந்தார். இந்த சந்திப்புக்குப் பின் வெளியில் நிருபர் களிடம் பேசிய கட்கரி, “ஒவ்வொரு தீபாவளி யின்போதும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் வருவது வழக்கம். அதுபோலவே தற்போதும் வந்தேன். மோகன் பாகவத்தை சந்தித்து பல்வேறு முக்கிய பிரச்சினைகளை பேசினேன். ஆனால் மகாராஷ்டிர அரசியல் பற்றியோ, முதல்வர் விவகாரம் பற்றியோ விவாதிக்கவில்லை” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மும்பை வருவதற்கு முன்பாக, பட்னாவிஸ், கட்கரி ஆகிய இருவரும் மோகன் பாகவத்தை சந்தித்துள்ளனர். மகாராஷ்டிர அரசியல் பற்றி பேசவில்லை என்று இருவரும் கூறினாலும், புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான விஷயங்களையே இருவரும் விவாதித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன் கட்கரி டெல்லியில் இருந்து நாக்பூர் வந்தபோது, பாஜக தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடந்துமுடிந்த தேர்தலில் பாஜகவுக்கு 123 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது. இந்நிலையில் முதல்வர் பதவிக்கு கட்கரி வரவேண்டும் என கட்சி எம்எல்ஏக்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கட்கரி தேர்வு செய்யப்படுவதற்கு வசதியாக, 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.
தொடக்கத்தில், “மாநில அரசியலுக்குத் திரும்புவதில் விருப்பமில்லை. டெல்லி அரசியலே நிறைவாக இருக்கிறது” என்று கூறிவந்த கட்கரி, தற்போது கட்சி எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது அவர் முதல்வர் பதவிக்கான போட்டிக்கு தயாராகி விட்டார் என்பதை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மோகன் பாகவத்தை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்துப்பேசிய தேவேந்திர பட்னா விஸ், நேற்று காலை மும்பை திரும்பினார். கட்கரி, பட்னாவிஸ் இருவருமே நாக்பூ ரைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் அல்ல, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்க மானவர்கள்.
மாநில பாஜக முன்னாள் தலைவர் சுதிர் முங்கந்திவார், “மூத்த தலைவரும், அனுபவம் மிக்கவருமான கட்கரியை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதை பட்னாவிஸ் கூட ஏற்றுக்கொள்வார்’’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே பாஜகவில் மற்றொரு நிகழ்வாக, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஏக்நாத் காட்சேவை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என இம்மாநிலத்தின் ஜல்காவோன் நகரில் பாஜக தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். “வடக்கு மகாராஷ்டிரத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட முதல்வராக வரவில்லை. எனவே காட்சே பெயரை பரிசீலிக்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
முக்கியப் பதவிகளுக்கான போட்டி பாஜக உறுப்பினர்களுக்கு இடையே தீவிரம் அடைந்துள்ளது.
இந்த வாரத்தில் புதிய அரசு
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு வரும் 29 அல்லது 30-ம் தேதி பதவியேற்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தலுக்கான கட்சியின் மேலிடப் பார்வையாளரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் நாளை மும்பை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது என்று மும்பையில் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறினார்.
ஹெல்மெட் அணியாததால் சர்ச்சை
கட்கரி தனது வீட்டில் இருந்து நாக்பூரின் மகால் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை யகத்துக்கு தனது வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றது டி.வி. சேனல்களில் ஒளிபரப்பானது. ஆர்.எஸ்.எஸ். தலைமையக வாயிலில் கட்கரியிடம், அவரது போக்குவரத்து விதிமீறல் குறித்து நிருபர் ஒருவர் கேட்டபோது, அதற்கு கட்கரி பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கட்கரியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“இந்த விதிமீறலை மற்றவர்கள் செய்திருந்தால் அது சாதாரண விஷயம். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சரே சட்டத்தை மீறுவது சரியல்ல. இச்செயல் கட்கரி மற்றும் அவரது கட்சியின் மனோபாவத்தையே காட்டுகிறது” என்றார் அவர்.
நாக்பூரில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் இதை மீறுவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்கு வரத்து போலீஸ் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்கரி நேற்று ஹெல்மெட் அணியாமல் சென்றது குறித்து நாக்பூர் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT