Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM
பெங்களூரில் 'கடலைக்காய் திருவிழா' எனும் பெயரில் கிராமிய கலாசார பெருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இவ்விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடி வடைந்தது. தொடக்கக் காலத்தில் இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்ற இவ்விழா, பெங்களூர்வாசிகளின் அமோக ஆதரவால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
எங்கெங்கும் கடலைமயம்
கன்னட மாதமான 'கார்த்திகா' மாதத்தின் கடைசி வாரத்தில் பெங்களூரின் புறநகரில் உள்ள 'பசவனகுடி' என்ற இடத்தில் 'கடலைக்காய் திருவிழா' நடைபெற்றது. இவ்விழாவின் போது, 30-க்கும் மேற்பட்ட நிலக்கடலை வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. சாலையில் கொட்டப்பட்டிருந்த நிலக்கடலையை சுவைத்துப் பார்த்து மக்கள் வாங்கிச் சென்றனர். பெரும் எண்ணிக்கையிலான சில்லறை வியாபாரிகளும், எண்ணெய் மண்டி வியாபாரிகளும் மூட்டைக் கணக்கில் தரமான கடலையை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். அதுமட்டுமில்லாமல் கடலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தரமான விதைக்கடலையை தேடித்தேடி வாங்கிச் சென்றனர். இன்னொருபுறம் வறுத்த கடலை, வேக வைத்த கடலை, கடலை மிட்டாய் உட்பட கடலை கலந்து செய்யப்பட்ட உணவு வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
கிராமிய விற்பனைமுறை
கணினி காலத்திலும் கிலோ கிராம் முறையில் விற்பனை செய்யாமல் வல்லம், உலக்கு (பெரிய டப்பா வடிவில்), பெரிய சேர் (படி), சின்ன சேர் என பழங்கால கிராமிய அளவு முறையிலே பெரும்பாலும் நிலக்கடலையை விற்றார்கள். இன்னும் சில விவசாயிகள் நெல், கேழ்வரகு, தேங்காய் போன்றவைகளை வாங்கிக்கொண்டு 'பண்டமாற்று முறையில்' கடலை விற்பனை செய்ததைக் காணமுடிந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநில விவசாயிகளும் நிலக்கடலை வியாபாரிகளும் இவ்விழாவில் வெகுவாக கலந்துகொண்டனர்.
20 லட்சத்திற்கு வர்த்தகம்
தொடக்க காலத்தில் 'கடலைக்காய் திருவிழாவை' பசவனகுடி மக்களுக்கு மட்டுமான திருவிழாவாக கருதியதால், அவ்வளவாக பெங்களூர்வாசிகள் கலந்துகொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பசவனகுடி கடலைக்காய் திருவிழாவை பெங்களூர்வாசிகள் தங்களது ஊர்த்திருவிழாவாகவே எண்ணி கோலாகலமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் பெங்களூர் மாநகராட்சி கடலைக்காய் திருவிழா ஏற்பாடுகளுக்கென கடந்த 3 ஆண்டுகளாக 5 லட்ச ரூபாய் ஒதுக்கி வருகிறது.
'இவ்வாண்டு கடலைக்காய் திருவிழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்திருப்பார்கள். பல ஊர்களை சேர்ந்த விவசாயிகளும் கடலை வியாபாரிகளும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக வந்திருந்தார்கள். இதன் மூலம் 20 லட்ச ரூபாய் அளவுக்கு நிலக்கடலை வியாபாரம் நடைபெற்று இருக்கும்'' என கடலை விற்பனை செய்த தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்த ராஜ் என்ற விவசாயி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT