Published : 10 Jan 2017 03:53 PM
Last Updated : 10 Jan 2017 03:53 PM
பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாக்ஷி மஹராஜ் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஜனவரி 11-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதாவின் சந்நியாசி எம்பியான சாக்ஷி மஹராஜ் மீரட் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதால் சிக்கலுக்குள்ளாகி உள்ளார்.
உ.பியின் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 6 அன்று மீரட்டில் சாதுக்கள் சபையின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் சாதுவுமான சாக்ஷி மஹராஜ் உரையாற்றினார்.
இதில் அவர், ‘நம் நாட்டின் மக்கள் தொகைக்கு இந்துக்கள் காரணம் அல்ல. இதற்கு 4 மனைவிகள் மற்றும் 40 குழந்தைகள் பெற அனுமதிக்கப்பட்டுள்ளவர்களே காரணம்.’ என தெரிவித்தார். இது முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சிக்கப்பட்டு இருப்பதாக உ.பியின் மீரட் அரசு நிர்வாகம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஐபிசி 298, 188, 295-ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது உபியின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்படும் நிலையில் தேர்தல் ஆணையமும் தானாக முன்வந்து சாக்ஷி மஹராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்படி, இனம், மதம் சார்ந்த கருத்துக்களைக் கூறி வாக்காளர்களைக் கவர்வதும் ஒரு வகையான குற்றம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சாக்ஷி மஹராஜ் யார்?
உ.பியில் காவி உடைந்த சர்ச்சை சாதுவாகக் கருதப்படுபவர் பாரதிய ஜனதாவின் உன்னாவ் தொகுதி எம்பியான சச்சிதானந்த் ஹரி சாக்ஷி எனும் சாக்ஷி மஹராஜ். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் உறுப்பினராக இருந்த சாக்ஷி மஹராஜ், 1991-ல் முதன் முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிறகு மீண்டும் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பரூக்காபாத்தின் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இதில் ஒருமுறை தனது தொகுதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அயோத்தியாவின் பாபர் மசூதி இடிப்பிலும் இடம் பெற்றவரான இவர், உபியின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். காரணம், அவர் மீது 2000 ஆம் ஆண்டில் இரண்டு பெண்களால் அளிக்கப்பட்ட பாலியல் பலாத்காரப் புகார். இதில் கைதானவர் திஹார் மற்றும் உபியின் ஏட்டா சிறையில் ஒரு மாதம் அடைக்கப்பட்டார். பிறகு இந்த வழக்கில் சாக்ஷி மஹராஜுக்கு எதிரான சாட்சிகள் இல்லை என 2001-ல் விடுவிக்கப்பட்டார்.
சாக்ஷி மகராஜ் மீது உத்தரப் பிரதேச காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT