Published : 21 Mar 2014 09:45 AM
Last Updated : 21 Mar 2014 09:45 AM
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
1991-ம் ஆண்டு முதல் காந்தி நகர் தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.பி.யாக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கடும் அதிருப்தியடைந்தார்.
மோடி நேரில் சந்திப்பு
இதைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள அத்வானியின் வீட்டிற்கு வியாழக்கிழமை காலை நரேந்திர மோடி சென்றார். அவர்களின் சந்திப்பு சுமார் ஐம்பது நிமிடங்கள் நீடித்தது. பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, வெங்கய்யா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் அத்வானியை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.
ராஜ்நாத் சிங் அறிக்கை
இந்த விவகாரம் குறித்து தி இந்துவிடம் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "காந்தி நகர் தொகுதி தொடர்பாக எந்தவிதமான கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அப்படியே இருந்தாலும் அதை அமைதியான முறையில் பேசித் தீர்த்து விடுவோம்" என்றார்.
இந்தப் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஓர் அறிக்கை வெளியிட்டார். அத்வானியின் விருப்பப்படி எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் அவர் போட்டியிடலாம் காந்தி நகரா, போபால் தொகுதியா என்பதை அவரே தேர்வு செய்து கொள்ளலாம் என்று ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
அத்வானி அறிவிப்பு
அதைத் தொடர்ந்து அத்வானி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத் மாநிலத்தில் இருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு பலமுறை நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். 1991 முதல் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வருகிறேன். 2014 மக்களவைத் தேர்தலிலும் காந்தி நகர் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
1947-ல் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர் குஜராத் மாநிலத்தோடு ஐக்கியமாகிவிட்டேன். போபால் தொகுதியில் நான் போட்டியிட மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநிலத் தலைவர் நரேந்தர் சிங் தாமோர், இப்போதைய போபால் எம்.பி. கைலாஷ் ஜோஷி ஆகியோர் எனது பெயரை பரிந்துரை செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியினர் பாசம் என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது என்று அத்வானி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT