Published : 28 Mar 2017 03:23 PM
Last Updated : 28 Mar 2017 03:23 PM
மாதேபுரா எம்.பி.யும் ஜன் அதிகார் கட்சியின் தலைவருமான பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சன் பாட்னா போலீசாரால் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 24-ம் தேதி அன்று, பாட்னாவின் கார்கில் செளக் பகுதியில் காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காகவும், சண்டையிட்டதற்காகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பப்பு யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்றும் பிஹார் சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் குதித்த யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து பப்பு யாதவ் அவரின் ஆதரவாளர்களின் உதவியோடு வன்முறையைத் தூண்டுவதாக பாட்னா காவல்துறை தெரிவித்தது.
பின்னர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு காந்தி மைதான காவல்துறை, மந்திரியில் உள்ள பப்பு யாதவின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தது. அப்போது யாதவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை விடுவிக்கக் கோரி கோஷமிட்டனர்.
மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், நள்ளிரவில் பாட்னா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மாநில அரசு கொலை செய்யத் திட்டம்
பப்பு யாதவ் தனது முந்தைய போராட்டங்களின்போது பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லல்லு பிரசாத்துக்கும் எதிரான கருத்துகளைக் கூறிவந்தார். மாநில அரசு தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் பப்பு யாதவ் கூறியதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT