Published : 09 Dec 2013 12:00 PM
Last Updated : 09 Dec 2013 12:00 PM
எளிமையான மனிதராக தன்னை முன்னிலைப்படுத்தியதுடன், வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
54 வயதாகும் சிவராஜ் தன்னை பற்றி எப்போதும் அடக்கத்துடன் பேசி வருபவர். அவரை நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு பலர் பேசியபோதும், அதை பொருட்படுத்தாமல் தனது மாநில மக்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்தார். அதற்கான பலனை இப்போது அவர் அறுவடை செய்துள்ளார்.
1959-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி செகோர் மாவட்டம் ஜெயிட் கிராமத்தில் சிவராஜ் சிங் பிறந்தார். தந்தை பிரேம் சிங் சவுகான். தாயார் சுந்தர்பாய். 1975-ம் ஆண்டு மாடல் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது மாணவர் சங்கத் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1976-1977 கால கட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தலைமறைவு இயக்கத்தில் சிவராஜ் சிங் சேர்ந்தார். 1977-ம் ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் சேர்ந்தார். போபால் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான் 1992-ம் ஆண்டு சாதனா சிங்கை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2003-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வராக உமா பாரதி பொறுப்பேற்றார். பின்னர், 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் பாபுலால் கவுர் முதல்வரானார். அதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதியிலிருந்து தற்போது வரை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். 2008-ம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சவுகான், இப்போது மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
1992-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகவும், 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை தேசியத் தலைவராகவும் சிவராஜ் சிங் பணியாற்றினார். 1992 முதல் 1994 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்தார். பின்னர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார்.
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக பேசும் தலைவராக மாநில மக்களிடையே நன்மதிப்பை சிவராஜ் சிங் சவுகான் பெற்றுள்ளார். விவசாயிகள், கிராமப்புற வாசிகள், சாதாரண மனிதர்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை உணர்ந்து, அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியவர். அவரின் இந்த மண்ணின் மைந்தன் என்ற தோற்றமே, இப்போது மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT