Published : 31 Mar 2014 10:22 AM
Last Updated : 31 Mar 2014 10:22 AM

தனிநபர் பிடியில் பாஜக இருப்பது சரியானது அல்ல: மோடி மீது ஜஸ்வந்த் சிங் மறைமுக தாக்கு

தனிநபர் பிடியில் கட்சி இருப்பது சரியானது அல்ல என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், பாஜக நிறுவனர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் (76), தனது சொந்த ஊர் அமைந்துள்ள பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு கட்சித் தலைமை அனுமதி அளிக்கவில்லை. அந்த தொகுதியில் போட்டியிட, சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சோனாராம் சவுத்ரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் களம் இறங்கியுள்ளார். வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு கட்சியின் தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை நிராகரித்த ஜஸ்வந்த் சிங், தேர்தலில் போட்டியிடுவது உறுதி எனத் தெரிவித்தார். இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்குவதாக சனிக்கிழமை இரவு பாஜக தலைமை அறிவித்துள்ளது.

கட்சியின் இந்நடவடிக்கை தொடர்பாக பி.டி.ஐ. செய்தியா ளரிடம் ஜஸ்வந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “தனிநபர் ஒருவரின் பிடியில் கட்சி இருப்பது சரியானது அல்ல. நாட்டில் தாங்கள் இல்லாவிட்டால் எதுவுமே நடைபெற முடியாது, அந்த அளவிற்கு தாங்கள் இன்றியமையாதவர்கள் என்று காட்டிக் கொண்டவர்களின் கல்ல றைகள் உலகம் முழுவதும் நிறைந்திருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இங்கு யாரும் நிலையாக இருந்ததில்லை. தனிநபர் இடும் கட்டளையை ஏற்றுச் செயல்படும் அமைப்பாக கட்சி இருக்கக்கூடாது.

மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படும் செயல், இறுதியில் கட்சியையே அழித்துவிடும்.

இத்தேர்தலில் நான் வெற்றி பெற்று, எனது ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு தேவைப் படும்பட்சத்தில் யாருக்கு ஆதரவு தருவது என்பதை தொகுதி மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன். பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் செயல்பாடு, கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும்” என்றார்.

அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துபோட்டியிட்டதால் நீக்கம்

கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டதால் ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக பாஜக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் சட்டதிட்டத்திற்கு எதிராக ஜஸ்வந்த் சிங் செயல்பட்டுள்ளார். விதிமுறை எண் 25 (9) ன்படி, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவோர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதன்படி, ஜஸ்வந்த் சிங்கும், ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதியில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் சுபாஷ் மஹரியாவும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து நூல் ஒன்றில் எழுதியதால், கட்சியிலிருந்து 2009-ம் ஆண்டு நீக்கப்பட்டார். பின்னர் ஓர் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x