Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான தண்டனை குறைப்பு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தெரிவிக்கவுள்ளது.
இந்த வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT