Published : 07 Oct 2014 08:42 AM
Last Updated : 07 Oct 2014 08:42 AM
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதில் பாஜக தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல் வருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி ஏற்பட்டதிலிருந்து, எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் இந்தியர்கள் பலி யாவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாகிஸ்தானின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் செயலுக்கு முடிவு கட்டுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?
பாகிஸ்தான் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை தர இந்தியா தவறிவிட்டது. அதனால்தான், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரு கிறது. பதற்றமான சூழ்நிலையால் எல்லையில் வசிப்போர் நிம்மதி இழந்துள்ளனர்.
மதிக்காத பாகிஸ்தான்
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற் றிருக்கும் புதிய அரசை பாகிஸ்தான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை எனத் தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் பாஜக அரசின் கொள்கை நிலையானதாக இல்லை. பேச்சு நடத்தப்படும் என்றும், தாக்குதல் நடத்தப்படும் என்றும் அடிக்கடி கருத்துகளை மாற்றித் தெரிவித்து வருகிறது.
இரட்டை நிலைப்பாடு
ஒரு பக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவிப்பது, மறுபுறம் தங்கள் சார்பில் வேத் பிரதாப் வேதிக் போன்றோரை தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத்தை சந்திக்க தூது அனுப்புவது என்று பாஜக இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதை மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர்.
சீன விஷயத்திலும் பாஜக அரசின் கொள்கை குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இல்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது, எல்லையில் அந்நாட்டு ராணுவம் ஊடுருவியது. அதைப் பற்றி கவலைப் படாமல் ஜின்பிங்குக்கு மோடி விருந்து அளித்துக்கொண்டிருந்தார். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறும்போது, “பக்ரீத் பண்டிகை தினத்தின்போது பாகிஸ்தான் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும். இதை விட மோசமான சம்பவம் எதுவுமில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டிக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT