Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
ஒருவர் திடீரென ரயில் பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம்.
ரயிலில் பயணம் செய்ய, பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் நடைமுறை இப்போது உள்ளது. தட்கல் டிக்கெட்டை முதல்நாள் காலை 10 மணியில் இருந்துதான் எடுக்கமுடியும்.
திருமணம், திருவிழா, அவசர வேலை நிமித்தம், குடும்ப நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரயில் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் எடுக்கிறார்கள். அவ்வாறு டிக்கெட் எடுக்கும் ஒருவர் திடீரென பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறொருவர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம். கணவர், மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி என்ற ரத்த சொந்தங்களாக இருந்து, ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
24 மணி நேரத்துக்கு முன்னதாக பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு யாரும் பெயர் மாற்றம் செய்ய முடியாது. சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்
தால், சலுகைக் கட்டண பயணத்துக்கு தகுதி இல்லாதவர், பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியாது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் உரிய காரணத்தைச் சொல்லி, ரத்த சொந்தம் என்பதற்காக ரேஷன் கார்டை காண்பித்து, பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். மற்ற ரயில் நிலையங்களாக இருந்தால், உதவி வர்த்தக மேலாளரிடம் பெயர் மாற்றம் செய்து தரும்படி கோரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT