Published : 08 Jan 2014 09:05 AM
Last Updated : 08 Jan 2014 09:05 AM
மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் ஆதார் அட்டை திட்ட இயக்குநரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரியுமான நந்தன் நிலகேனி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி, பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா மற்றும் கர்நாடக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது ஜனவரி மாதம் கடைசி வாரத்திற்குள் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்து டெல்லிக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கட்சி மேலிடம் யாருக்கு சீட் வழங்க முடிவு செய்கிறதோ, அதை ஏற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே கூட்டத்தில் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா,''பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட, ஆதார் அட்டை திட்டத்தின் இயக்குநர் நந்தன் நிலகேனி விரும்புகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை நிலகேனி சந்தித்து பேசினார். அவர் மீது மக்களுக்கும் கட்சி மேலிடத்திற்கும் நல்லெண்ணம் இருக்கிறது. எனவே அவருக்கு சீட் வழங்கினால் நிச்சயம் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இதனிடையே செவ்வாய்க் கிழமை காலை கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த நந்தன் நிலகேனி, தான் போட்டியிடவுள்ள தொகுதியில் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அதோடு, பெங்களூரில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் திக்விஜய் சிங்கை சந்தித்து நிலகேனி ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூர் தெற்கு தொகுதியில் நந்தன் நிலகேனி போட்டியிட கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துவிட்டதாக திக் விஜய் சிங் அவரிடம் கூறியதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நந்தன் நிலகேனி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டனர்.
பெங்களூர் தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அனந்த குமார் போட்டியிடலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT