Last Updated : 09 Oct, 2014 03:26 PM

 

Published : 09 Oct 2014 03:26 PM
Last Updated : 09 Oct 2014 03:26 PM

எல்லையில் இதுவரை பார்த்திராத அதிர்ச்சி தரும் பாகிஸ்தான் தாக்குதல்: 80 வயது மூதாட்டியின் அனுபவப் பகிர்வு

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நிகழும் சம்பவமாக இருந்தது மாறி, கடந்த 4 நாட்களாக அன்றாடச் சம்பவமாகியுள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்; 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர், உயிருக்கு அஞ்சி 30,000 பேர் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், எல்லை கிராம மூதாட்டி ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீரின் அன்ரியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியை ஒட்டி உள்ள கிராமம் மஹாஷா கோடே. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் பிரகசோ தேவி (80 வயது).

"எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி ஒரு தாக்குதலை இத்தனை ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை. மிகவும் உக்கிரமாக நடந்த போர்களின் போதுகூட தற்போது போல் கிராமமக்கள் இரையாகவில்லை. எல்லை கிராமங்கள் குறிவைக்கப்படவில்லை. ஆனால், இப்போது எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்கிறார் பிரகாசோ தேவி.

மேலும் அவர் கூறுகையில், "1947-ல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் இருநாட்டு வீரர்களும் வாள் சண்டை புரிந்தனர். அப்போது நான் மிகவும் சிறியவள். இந்திய வீரர்கள் தைரியமாக எதிரிகளை எதிர் கொண்ட காட்சிகள் என் மனதில் நிழலாடுகின்றன.

கால மாற்றத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நவீனமானது. அப்போதுகூட பொதுமக்கள் இலக்காக இருந்ததில்லை.

ஆனால், இம்முறை எனக்கே ஏன் என்று புரியவில்லை. அப்பாவி கிராமவாசிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

என் அண்டை வீட்டைச் சேர்ந்த பம்ரூ தேவியின் குடும்பத்தினர் 4 பேர் பலியாகினர். அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். பாம்ரூ தேவி வீட்டில் அந்த அசம்பாவிதம் நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் அங்கு ஓரு குடும்ப விழா நடந்தது. நானும் சென்றிருந்தேன். அன்றிரவே அந்தத் துயரமும் நிகழ்ந்துவிட்டது.

முதலில் படபடவென துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே தூக்கத்தில் இருந்த பாம்ரூ தேவி குடும்பத்தினர் விழித்துக் கொண்டனர். அங்கிருந்து அவர்கள் தப்ப நினைத்தபோது பீரங்கிக் குண்டுகள் வீட்டைச் சேதப்படுத்த 4 பேர் இறந்தனர். பாம்ரூ தேவி குடும்பத்தின் கொண்டாட்டத்தை சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்" என வருத்தப்பட்டார்.

பிரகாசோ குடும்பத்துடன் தனது வீட்டில் இருந்து வெளியேறி அரசு அமைத்துள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளார். அவருடன் 17 குடும்பத்தினர் அந்த முகாமில் தங்கியுள்ளனர். பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்திய பின்னர் சொந்த ஊருக்குச் செல்லலாம் என அனைவரும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதல் நின்ற பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பினாலும், முன்புபோல் இயல்பாக வாழ முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி என கூறுகிறார் பிரகாசோ. இடிந்து வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம், தொழிலை மீட்டுக் கொள்ளலாம், ஆனால் பாகிஸ்தானின் கோரத் தாக்குதலால் ஏற்பட்ட வடு காலத்திற்கும் மறையாது என அவர் கூறுகிறார்.

பிரகாசோ தேவி மட்டுமல்லாமல், முகாமில் இருக்கும் பலரும், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான வசிப்பிடத்தை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x