Published : 09 Oct 2014 07:43 PM
Last Updated : 09 Oct 2014 07:43 PM
போர் நிறுத்த உடன்படிக்கைகளை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசை எதிர்கட்சிகள் சாடிவரும் நிலையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தைரியத்துடன் பதிலடி கொடுத்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரமதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசும் போது, “இன்று எல்லையில் தோட்டாக்கள் பாய்ந்த போது அலறியது பகைவர்களே. எதிராளியின் தாக்குதலுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடியை தைரியமாகக் கொடுத்துள்ளனர்.
பகைவர்களின் பழைய பழக்கங்களை இனி ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என்பதையும், காலம் மாறிவிட்டது என்பதையும் அவர்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.
இது போன்ற தருணங்களில் அரசியல் ஆதாயம் தேடுவது முறையல்ல, எல்லையில் நடப்பது அரசியல் விவாதத்திற்குரியதல்ல, தேர்தல்கள் வரும் போகும், அரசுகள் வரும் போகும், ஆனால், எல்லையில் போராடும் நமது நாட்டு ராணுவ வீரர்களை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் இந்த விவகாரங்களை அரசியல் சுய-லாபங்களுக்காக தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
மக்களுக்கு எனது நோக்கம் தெரியும், அதனை வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை இயங்கச் செய்து அவர்களின் பேச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து இந்த வழியில் மட்டுமே பேசுவார்கள்” என்றார் மோடி.
எல்லையில் பதற்றம் நீடிக்கும் போது மகாராஷ்டிரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் மோடி என்று ஷரத் பவார் குற்றம்சாட்டியதற்கு பதிலடி கொடுத்த மோடி, “அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது பாகிஸ்தான், சீனா தொடர்பாக எல்லைப் பிரச்சினைகள் இருந்ததே, அப்போது எல்லைக்குச் சென்று வந்தாரா அவர்?
மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் மலேகான், மற்றும் புனேயில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது, பயங்கரவாதிகளை அடையாளம் காண முடிந்ததா அவரால்? அவர்களைப் பிடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். எங்களது தேசப்பற்று காரணமாக நாங்கள் அதனை அரசியலாக்கவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT