Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

2012ல் டெல்லி அருகே படைப்பிரிவுகள் நடமாடிய விவகாரம்: முன்னாள் ராணுவ அதிகாரியின் கருத்தால் புதிய சர்ச்சை

டெல்லி அருகே 2012ல் ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் வெளியில் நடமாடிய விவகாரத்தில் அப்போதைய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ஏ.கே.சவுத்ரி தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.அதனால் அது பிரச்சினையாக தெரிந்திருக்கலாம். எனினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அது என்ற பேச்சு அர்த்தமற்றது என்றார் சவுத்ரி.

இது தொடர்பாக பாட்னாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லி அருகே படைப்பிரிவுகள் வெளியில் நடமாடியது ஆட்சிகவிழ்ப்பு முயற்சியாக இருக்கலாம் என்பது கற்பனையானது. படைப்பிரிவுகள் நடமாட்டம் வழக்கமான நடவடிக்கை என எடுத்துச் சொன்னதும் அரசு உடனடியாக அதை புரிந்துகொண்டது. அதற்கு முன் ராணுவத்தை தவறான கண்ணோட்டத்துடன் அரசு பார்த்திருக்கலாம்.அல்லது நம்பாமல் இருந்திருக்கலாம்.

படைப்பிரிவுகளின் நடமாட்டத்தை, தனது பிறந்த தேதி சர்ச்சை விவகாரத்தில் அரசை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வி.கே.சிங் முடிவுடன் முடிச்சு போடக் கூடாது. படைப்பிரிவுகள் வெளியில் பயிற்சி மேற்கொள்வது என்பது முன் கூட்டியே திட்டமிடப்பட்டவை. உச்ச நீதிமன்றத்தை வி.கே.சிங் அணுகியதும் படைப்பிரிவுகளின் நடமாட்டமும் தற்செயலாக ஒரே நேரத்தில் அமைந்தது.

அரசுக்கும் ராணுவ தலைமையகத்துக்கும் இடையே தினமும் கலந்தாய்வு நடக்கும். குழப்பம் அடைந்திருந்தால் அந்த சந்திப்பில் தனது சந்தேகத்தை அரசு கேட்டுத் தீர்த்துக் கொண்டிருக்கும்.

அப்போதைய நிலையில் அரசு பதற்றத்துக்குள்ளானது தேவையற்ற ஒன்று. சந்தேகப்படும்படி ஏதாவது தகவல் கிடைத்திருந்தால் அரசு எங்களை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாமே என்பதே எனது மனதில் அப்போது தோன்றியது.

படைப்பிரிவுகள் நடமாட்டம் பற்றி அரசு கவலை கொண்டதையடுத்து அவற்றை திருப்பி அனுப்பும்படி அப்போதைய பாதுகாப்புச் செயலர் சசி காந்த சர்மா என்னிடம் தெரிவித்தார். படைப்பிரிவுகள் நடமாட்டம் வழக்கமான ஒன்று. கவலை அடையத் தேவையில்லை என்று நான் சொன்னதும் அதை அவர் புரிந்துகொண்டார் என்றார் சவுத்ரி.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியதாவது:

ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையில் அவநம்பிக்கை நிலவுவதாக நான் கருதவில்லை., நான் பார்க்காத ஒரு விஷயம் பற்றி என்னால் எப்படி கருத்து கூறமுடியும். நான் அரசு அதிகாரி. ராணுவத்துடன் அன்றாடம் இணைந்து செயல்படுகிறேன் என்றார் மேனன்.

பாஜக கவலை

அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே அவநம்பிக்கை என்பது வேதனைக்குரிய விஷயம். தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பது ராணுவம். இத்தகைய சர்ச்சைகள் வேதனைக்குரியவை என்றார் பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத்.

வி.கே.சிங்: ராணுவத்தை களங்கப்படுத்திட அதன் வழக்கமான நடவடிக்கைகளையும் திரித்து சந்தேகம் எழுப்பப்படுவதை இது உறுதி செய்கிறது என்று ட்விட்டர் பதிவில் அப்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரச்சினை எழ சண்டீகரைச் சேர்ந்த மூத்த அதிகாரிதான் காரணம் என்பதை சவுத்ரியின் கருத்து உறுதி செய்கிறது என்றார்.

பிறந்த தேதி சர்ச்சை தொடர்பாக 2012 ஜனவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் வி.கே.சிங்.

இதனிடையே, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: பழைய கேள்விகளையே திரும்ப திரும்ப எழுப்புகிறீர்கள். அப்போது நடந்த படை வீரர்கள் நடமாட்டம் வழக்கமான பயிற்சிக்கானது தான். எனக்கும் வி.கே.சிங்குக்கும் இடையில் அவநம்பிக்கை எதுவும் இருந்ததில்லை என்றார் அமைச்சர் அந்தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x