Published : 30 Sep 2014 12:33 PM
Last Updated : 30 Sep 2014 12:33 PM
அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் தலைநகர் வாஷிங்டன் சென்றார். அங்கு அதிபர் ஒபாமா அளித்த இரவு விருந்தில் அவர் பங்கேற்றார்.
வெள்ளை மாளிகையின் வாசலில் நின்றிருந்த அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியிடம் ‘கெம் சோ’ (எப்படி இருக்கிறீர்கள்) என்று குஜராத்தி மொழியில் நலம் விசாரித்து வரவேற்றார். மோடியின் தாய்மொழியில் ஒபாமா பேசியது வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதற்கு மோடி ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
விருந்து நிகழ்ச்சியில் இந்திய தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியத் தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜோபிடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தண்ணீர் மட்டும் அருந்திய மோடி
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி ஒன்பது நாள்கள் விரதம் இருந்து வருகிறார். இதனால் விருந்தில் அவர் தண்ணீர் மட்டும் அருந்தினார். இதுகுறித்து கூட்டத்தில் பேசிய அவர், நான் விரதம் இருப்பதால் சாப்பிடவில்லை, நீங்கள் விருந்தை ருசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சுமார் 90 நிமிடங்கள் மோடியும் ஒபாமாவும் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இருநாட்டு மக்களின் நன்மைக்காகவும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் அதிபர் ஒபாமாவுடன் பேசினேன் என்று தெரிவித்துள்ளார்.
‘சாலேன் சாத் சாத்’ கூட்டறிக்கை வெளியீடு
மோடி, ஒபாமா விருந்து சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
‘சாலேன் சாத் சாத்’ (இணைந்து முன்னேறுவோம்) என்ற தலைப் பிலான அந்த கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் நம்பகமான நட்பு நாடுகளாக உள்ளன இந்த நட்புறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த உலகத்துக்கே நன்மையாக அமையும், தீவிரவாத அச்சுறுத்தல்களை இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் மிஷேல் இல்லை
அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் அமெரிக்க, இந்திய தரப்பைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா பங்கேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT