Published : 25 Mar 2014 05:13 PM
Last Updated : 25 Mar 2014 05:13 PM
வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்றபோது பாஜகவினரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.
டெல்லியில் இருந்து புறப்படும் முன் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற்காக மோடியுடன் ராகுலும் தோற்கடிக்கப்பட வேண்டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான்” என்றார்.
டெல்லியில் இருந்து தனது குடும்பத் தினருடன் சிவகங்கா எக்ஸ்பிரஸ் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந்தார் கேஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோதியா, கட்சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர்.
கங்கையில் நீராடிய கேஜ்ரிவால் அங் குள்ள காலபைரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கட் மோர்ச்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.
பாஜகவினர் எதிர்ப்பு
அவருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ‘கேஜ்ரி வால் ஒழிக’, கேஜ்ரிவால் திரும்பி போ’ என கோஷமிட்டனர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கேஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதிலிருந்து நூலிழையில் தப்பினார் கேஜ்ரிவால். கேஜ்ரிவாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீ ஸார் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.
வாரணாசியின் முஸ்லிம் தலைவர் களையும் கேஜ்ரிவால் சந்தித்தது, அந்த சமுதாயத்தினரின் வாக்குகளையும் அவர் குறி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், கேஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கேஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கேஜ்ரிவால்
ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.
வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவதை அறிவிக்கும் வகையில், இங்குள்ள ராஜ்நாராயண் பூங்கா மைதானத்தில் கேஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், “குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர்களுக்கு மிக மலிவான விலையில் கொடுத்து வருகிறார் மோடி. விவசாயிகளுக்கு கிடைத்து வந்த பல மானியங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. குஜராத்தில் கடந்த 5 வருடங்களாக 5,874 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். குஜராத்தில் கடந்த 10 வருடங்களாக ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதைத்தான் வாரணாசியிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங்கிரஸை பாஜகவும் ஆதரிக்கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை” என்றார் கேஜ்ரிவால். கேஜ்ரிவால் தனது உரையில் சமாஜ்வாதி கட்சி பற்றியோ, பகுஜன் சமாஜ் கட்சி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT