Last Updated : 26 Jun, 2016 12:30 PM

 

Published : 26 Jun 2016 12:30 PM
Last Updated : 26 Jun 2016 12:30 PM

ஒலியை விட வேகமாக செல்லும் உலகின் வலிமைமிக்க பிரம்மோஸ் ஏவுகணை சுகோய் போர் விமானத்துடன் இணைப்பு

ஒலியை விட வேகமாக செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை இந்திய விமானப்படையின் சுகோய் ரக போர் விமானத்துடன் நேற்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட சுகோய் 30 ரக போர் விமானங்கள் நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) மையத்தில் மேம்படுத்தப்பட்டு, எஸ்யூ 30எம் கேஐ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போர் விமானத்தில் ஒலியை விட வேகமாக செல்லும் உலகின் வலிமைமிக்க பிரம்மோஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய விமானப்படைக்கு எதிரி களை தாக்கி அழிக்கும் திறன் அதிகரித்திருப்பதாக கூறப்ப டுகிறது.

இது குறித்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொதுமேலாளர் பதக் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெச்ஏஎல்லின் முதன்மை மேலாண் இயக்குநர் டி.சுவர்ண ராஜூ, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஒ சுதிர் குமார் மிஸ்ரா மற்றும் ஹெச்ஏஎல் நாசிக் சிஇஒ தல்ஜீத் சிங் ஆகியோரின் முன்னிலையில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணையுடன் சீறிப் பறந்த விமானம், மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.

இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பிரம்மோஸ் இணைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து முக்கிய நிலைகளை எளிதாக அழிக்க முடியும். எஸ்யூ 30எம்கேஐ போர் விமானத்தில் பிரம்மோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டதன் மூலம், பல முனை ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் பெற்ற ஒரே விமானப்படையாக இந்திய விமானப்படை மாறியுள்ளது. மேலும் ஒலியை விட வேகமாக செல்லும் அதிநவீன ஏவுகணையை சுமந்து செல்லும் உலகின் ஒரே விமானப் படை என்ற பெருமையும் வந்து சேர்ந்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து வரும் சில மாதங்களில் இந்த போர் விமானம் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தி இலக்கை தாக்கும் உண்மையான சோதனை நடத்தப்படும். அப்போது 2.5 டன் எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை எவ்வாறு தாக்கி அழிக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியப் போகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையுடன் வானில் சீறிப் பாய்ந்து பின்னர் நாசிக்கில் உள்ள ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய இந்திய விமானப்படையின் போர் விமானம்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x