Last Updated : 02 Nov, 2013 07:33 AM

 

Published : 02 Nov 2013 07:33 AM
Last Updated : 02 Nov 2013 07:33 AM

காமன்வெல்த் மாநாட்டு எதிர்ப்பு எதிரொலி: கோத்தபய ராஜபக்ச வருகை ரத்து

இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.



பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை மத்திய வெளியுறவுத் துறை 'நட்புரீதியில்' கேட்டுக்கொண்டதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறின.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என தமிழகத்தின் பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என அறிவித்திருந்தார்.

இதை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. கடந்த புதன்கிழமை டெல்லியில் கூடிய காங்கிரசின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து பிரதமரை சந்தித்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பிரதமரை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார். பின்னர், 'காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி இன்னும் இந்தியா முடிவு செய்யவில்லை.' எனத் தெரிவித்தார்.

அரசியல் நெருக்கடி... தமிழகத்தில் சூடுபிடித்துள்ள இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, 'இந்தியாவிலிருந்து ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது.' என எச்சரித்தார். மேலும், சில தமிழ்நல அமைப்புகள் சார்பில் வேலை நிறுத்தமும் நடத்தப்பட்டது.

இவ்வாறு, தமிழகத்தில் கொந்தளிப்பு கிளம்பியுள்ள நிலையில் கோத்தபயாவின் டெல்லி வரவு, காங்கிரசுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என கருதப்பட்டது.

உளவுத்துறை அறிக்கை...

இது பற்றி டெல்லியின் வெளியுறத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிப் பேசும் சாக்கில் கோத்தபயா டெல்லி வந்து பிரதமர், மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரை சந்தித்து, காமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தர வலியுறுத்தும் திட்டத்தில் இருந்தார்.

ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவும் நிலை பற்றிய அவசர அறிக்கை சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை சார்பில் அரசுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கை அமைச்சர் தன் பயணத்தை ரத்து செய்ததாக டெல்லியில் செய்திகள் உலவுகின்றன.

இலங்கை தூதரகம் மறுப்பு...

இது குறித்து டெல்லியின் இலங்கை தூதரகத்தில் கேட்ட போது, கோத்தபயாவின் இந்திய வருகை குறித்த தகவல் தம்மிடம் எதுவும் வரவில்லை எனக் கூறினர். ஆனால், கோத்தபயவின் வருகையை உறுதி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, "கோத்தபயவிடம் தமிழக மீனவர் பிரச்சினை பற்றியும் பேசப்படும்" என கூறியிருந்தார். காங்கிரசிலும் எதிர்ப்பு...

இதற்கிடையே, பிரதமர் கொழும்பு செல்வது உறுதியாகி அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று அவரது வருகைக்கு முன்னதான பணிகளை மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சில அமைச்சர்கள் பிரதமரிடம், மாநாட்டில் கலந்து கொள்ளும்போது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்குச் சென்று அங்குள்ள தமிழர்களை பார்வையிட்டு வந்தால் பிரச்சினையை சாமாளித்து விடலாம் என ஆலோசனை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபக்ச, இலங்கை காமன்வெல்த் மாநாடு, இலங்கை அரசு, கோத்தபய, இலங்கை தூதரகம், காமன்வெல்த் மாநாடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x