Published : 11 Oct 2014 01:11 PM
Last Updated : 11 Oct 2014 01:11 PM
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரத்தியேக செயலியை உருவாக்கலாம் என்று தம்மிடம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பெர்க் உறுதியளித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இணைய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமை இந்தியா வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்நது: "ஸக்கர்பெர்குடனான சந்திப்பு அருமையான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் தருணமாக இருந்தது. பல புதிய திட்டங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.
தூய்மையான இந்தியா குறித்து நான் தெரிவித்ததும், அதற்கு உதவும் வகையில், ஃபேஸ்புக் மூலம் செயலியை உருவாக்கலாம் என்று ஸக்கர்பெர்க் தெரிவித்தார். இந்த செயலி தூய்மை இந்தியா திட்டத்தை பரப்புவதற்கு உதவும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று மோடி கூறியிருக்கிறார்.
மேலும், இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆர்வத்தை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஊக்குவிப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சி உள்ளிட்டவைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசித்தனர்.
இதன் பின்னர் ஸக்கர்பெர்க், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT