Published : 04 Jan 2014 12:08 PM
Last Updated : 04 Jan 2014 12:08 PM
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றியை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஆலோசனை நடத்துகிறது. டெல்லியில் ஆம் ஆத்மியின் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று ( சனிக்கிழமை)நடைபெறுகிறது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால்: "நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்தும், கட்சி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்க இருக்கிறோம். இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படாது" என்றார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இக்கூட்டம் குறித்து ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில்: "ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய செயற்குழு கூட்டம் இது. இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கிறோம். மேலும் கட்சி நிர்வாக விவகாரங்கள் பற்றியும் பேசவிருக்கிறோம்" என்றார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், ஊழலை ஒழிப்போம் என்ற வாக்குறுதிகளுடன் டெல்லி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றியது.
ஏற்கெனவே குஜராத், உத்திரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி களம் காண்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT