Last Updated : 15 Jun, 2017 09:43 AM

 

Published : 15 Jun 2017 09:43 AM
Last Updated : 15 Jun 2017 09:43 AM

மதச்சார்பின்மைக்கு இணையானது புதிய வேலைவாய்ப்புகள்

க டந்த 2014 மக்களவை பொதுத்தேர்தலின்போதுதான் முதல் முறையாக பாஜகவுக்கு வாக்களித்தேன். மிகவும் ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு அது. வாக்களிப்பதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள், இடர்கள், வாய்ப்புகளை ஆராய்ந்தேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன், நான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை; எஞ்சியுள்ள 2 ஆண்டுகளும் காத்திருப்பேன்.

ஒவ்வொரு நாட்டுக்கும் எப்போதாவது ஏற்படும், மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் பருவம் அது. அப்போது சரியான ஒருவரைப் பிரதமர் பதவியில் அமர்த்தினால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வசதியும் கிடைத்து, வறுமைக் கோட்டிலிருந்து நடுத்தர வகுப்பினர்களாக உருவாக வாய்ப்புக் கிடைக்கும் என்றே கணக்கிட்டேன். 12 ஆண்டுகளில் இந்தப் பருவத்தைக் கடப்போம், முதியோர் அதிகம் வாழும் நாடாகிவிடுவோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், நரேந்திர மோடி என்ற மூவரே இருந்தனர். அவர்களுடைய முந்தைய செயல்பாடுகள், வாக்குறுதிகள் அடிப்படையில் மோடியே சிறந்தவர் என்று தீர்மானித்தேன். உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்துவார் என்று நம்பினேன். மோடி இல்லாத பாஜகவுக்கு கவர்ச்சி இல்லை.

மோடிக்கு வாக்களிப்பதால் ஏற்படக் கூடிய இடர்களையும் உணர்ந்திருந்தேன். மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துபவர், சர்வாதிகாரி, ஒரு சார்பாக சிந்திப்பவர் என்று தெரியும். அவருக்கு வாக்களிக்காவிட்டால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என்றும் அஞ்சினேன். வேலைவாய்ப்புகள் உருவாகாவிட்டால் இளைஞர்கள் பொறுமை இழப்பர், கலவரங்கள் அதிகரிக்கும், ஒரு தலைமுறையே வீணாகிவிடும் என்று அஞ்சினேன். இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறினாலும் நாட்டை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டுவரும் அளவுக்கு இந்தியாவின் கட்டமைப்பான உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்றவை வலுவானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா பாசிச நாடாகிவிடாது. 2002-ல் குஜராத்தில் நடந்தது போன்ற கலவரம் மறுபடியும் அரங்கேறாது என்பதில் உறுதியாக இருந்தேன். வகுப்புக் கலவரக் கறையை மோடியின் கரங்களிலிருந்து நான் துடைத்துவிடவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது மதச்சார்பின்மையைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் மூலம் கோடிக்கணக்கானோர் பலன் பெறுவார்கள் என்பதால் ஆதரித்தேன்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மோடி ஓரளவுக்குத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதே சமயம் ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகம் நன்றாக இருக்கிறது. பணவீக்கம் சாதனையாக 3%-க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான நிதி பற்றாக்குறை 4.5%-லிருந்து 3.5% ஆகக் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 7%, பணமதிப்பு நீக்கம் நடந்திராவிட்டால் 8% ஆகியிருக்கும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக மின்சார உற்பத்தியில் உபரி ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிக அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்குத்தான் கிடைத்து வருகிறது. பெரிய சீர்திருத்தங்கள் சாத்தியமாகியுள்ளன. பல குறைகள் இருந்தாலும் பொது சரக்கு சேவை வரி அமலுக்கு வருகிறது. வாராக்கடன்களைக் குறைக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் திவால் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்புகள் பல நீக்கப்பட்டுவிட்டன. அந்நிய நிதி முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் கலைக்கப்பட்டுவிட்டது. கனிம வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பொது ஏலத்தில் வெளிப்படையாக விற்று அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் திட்டம் நன்கு செயல்படுகிறது. தொழில் தொடங்குவதற்கான ஆவணங்களையும் சான்றுகளையும் அவரவர் சுய சான்று அளித்து, காலதாமதமின்றி விண்ணப்பிக்கவும் ஒப்புதல் பெறவும் வழிகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.

இப்படியிருக்க வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மோடி எப்படித் தோற்றார். இதுகுறித்து யாரும் தீவிரமாகச் சிந்திக்கவில்லை. வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கே மூன்று ஆண்டுகளாக அதிகக் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வாராக் கடன் காரணமாக தொழில்துறையில் தனியார் முதலீடு செய்வது குறைந்துவிட்டது. எனவே வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. அதிகாரிகளையே அரசு அதிகம் சார்ந்திருக்கிறது. பெரும்பாலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தனியார் துறை எப்படி வேலைகளை உருவாக்குகிறது என்று தெரியாது. வீடமைப்பு உள்ளிட்ட கட்டுமானத்துறையால் தான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்நிலையில் 28% வரி விகிதப் பட்டியலில் சிமென்ட்டைச் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பிரச்சினை வேலையில்லை என்பதல்ல, படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று நிதி ஆயோக்கின் 3 ஆண்டு செயல்திட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதிக உற்பத்தித் திறன் உள்ள வேலைவாய்ப்புகள் ஏற்பட வேண்டும். ஏற்றுமதியால்தான் இது முடியும். உலகச் சந்தைக்காகத் தயாரித்தால்தான் இது சாத்தியம்.

இந்தியாவில் தயாரிப்போம் என்பது போதாது, உலகத்துக்காகத் தயாரிப்போம் என்ற முனைப்பு வேண்டும். இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டில் தயாரிப்போம் என்ற காலாவதியான கொள்கைக்கு மீண்டும் உயிரூட்டுகிறார்கள். உலகச் சந்தையின் மதிப்பு 16 டிரில்லியன் டாலர்கள் அதில் இந்தியாவின் பங்களிப்போ வெறும் 1.8% என்பதை அர்விந்த் பனகாரியாவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மோடிக்கு வாக்களித்ததால் ஏற்படக்கூடும் என்று அஞ்சிய ஆபத்துகள் எப்படி உள்ளன? மிகப் பெரிய அளவில் வகுப்புக் கலவரங்கள் ஏற்படவில்லை என்றாலும் தலித்துகள் தாக்கப்பட்டனர் அல்லது முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர் என்று வாரத்துக்கு ஒரு செய்தியாவது வருகிறது. இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதுடன் முன்னேற்றத்துக்காக உழைக்கும் அரசின் கவனத்தைச் சிதற வைப்பதுமாகும். சமீபத்திய உதாரணம், இறைச்சிக்காகக் கால்நடைகளைச் சந்தையிலிருந்து நேரடியாக ஓட்டிச் செல்லக்கூடாது என்ற விதிமுறை. பசு வதையையோ இறைச்சியை உண்பதையோ நேரடி யாகத் தடுக்காவிட்டாலும் ஏதோ உள்நோக்கத்துடன் வகுக்கப்பட்டிருக் கிறது. கால்நடைகளை விற்க அவரிடம் அனுமதி, இவரிடம் ஒப்புதல், அவற்றின் நகல்கள் என்று விவசாயியை லைசென்ஸ் ராஜ் காலத்தைப்போல அலைக்கழிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும். இந்தியாவிலிருந்து தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. லட்சக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும் இருக்கும் வேலை வாய்ப்புகளையாவது குலைக்காமல் இருப்பது அவசியம்.

ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த பலர் எனக்கு நண்பர்கள். பசு பாதுகாப்புக் குழு என்று கூறிக்கொண்டு, கால்நடைகளை ஓட்டிச் செல்கிறவர்களைத் தாக்குவதெல்லாம் இந்துத்துவா ஆகாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய செயல்களால் மோடியின் பெயருக்குத்தான் களங்கம் ஏற்படும். வரலாறு தன்னைப் பெரிய தலைவராகப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த சில்லுண்டி குழுக்களைக் கட்டுப்படுத்தினால்தான் அது சாத்தியம். இவர்களைக் கடுமையாகத் தண்டித்து ஒடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர் வெளிப்படையாகப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

வேலைவாய்ப்புகள் பெருகவில்லை, மதரீதியாக மக்கள் திரட்டப்படுகின்றனர் என்றாலும் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் இந்த அரசு செய்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் முடிய காத்திருப்பேன். காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றன. வேறு யாரும் தகுதியாக இல்லை என்று 2014-ல் வாக்களித்ததைப் போல அல்லாமல், சாதனைகளுக்காகவே 2019-ல் வாக்களிப்பேன் என்று நம்புகிறேன்.

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x