Published : 08 Apr 2017 08:09 PM
Last Updated : 08 Apr 2017 08:09 PM
அகிலேஷ் யாதவ்வுக்கு மிகவும் பிடித்த கோம்தி ரிவர் ஃப்ரண்ட் திட்டத்தில் நிதிமுறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட உ.பி. அதிரடி முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது மாயாவதி தலைமையிலான பகுஜன் ஆட்சியின் போது சர்க்கரை ஆலைகளை விற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உ.பி. மாநிலத்தில் 2007 முதல் 2012 வரை பகுஜன் ஆட்சி செய்தது. இதில் 2010-11 காலக்கட்டத்தில் 21 சர்க்கரை ஆலைகள் விற்கப்பட்டதில் ரூ.1,100 கோடி அளவில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணையை நாடுவோம் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “அரசு உடைமைகளை விற்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை, சொத்துக்கள் மக்களுடையது. அதனை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.
மேலும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ஏப்ரல் 23-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு கீழ்படியாவிட்டால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்று ஆதித்யநாத் எச்சரித்ததாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது அரசின் தலையாய கடமை” என்று யோகி ஆதித்யநாத் சர்க்கரைத் துறையில் பேசிய போது கூறியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கரும்பு விவசாயிகளின் துயரத்தை போக்க நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2,293 கோடி கரும்பு வளர்ப்பிக்கான செலவுத்தொகையை கொடுத்துள்ளது உ.பி.அரசு.
மேலும், சர்க்கரைத்துறை மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடும் போது முதல்வர் ஆதித்யநாத், கரும்பு விவசாயிகளின் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் சமிதி மட்டத்தில் கன கிசான் திவாஸ் நடத்தி இந்த குறைதீர்ப்பு முயற்சி முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநிலத்தில் செயலில் உள்ள 116 சர்க்கரை ஆலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் லட்சிய கிராம திட்டத்தின் கீழ் 580 கிராமங்களை தத்து எடுத்துக் கொள்ளும் திட்டத்தையும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT